மீட்பு நடவடிக்கையில் ராணுவம், கடற்படை; தகவல் தொடர்பு துண்டிப்பால் மக்கள் அவதி: சென்னையில் ஓய்வின்றி பணியாற்றும் அரசு இயந்திரம்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு இயந்திரம் ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், உடைமைகள் சேதமாயின. பல இடங்களில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன. பல சாலைகளில் நேற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் இன்னும் மின்சாரம் விநியோகம் சீராகவில்லை. இதனால் வீட்டு தொட்டிகளுக்கு குடிநீரை ஏற்ற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிகனமழை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் தரைதளத்தில் வசித்தவர்கள் பலர் தங்கள் குடும்பங்களுடன் வெளியூர் மற்றும் உறவினர் வீடுகளுக்கு, உடைமைகளை சுமந்துகொண்டு புறப்பட்டனர். குறைந்த அளவே கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பால், மளிகை பொருட்கள், குடிநீர், காய்கறி போன்றவற்றை வாங்க, தேங்கிய வெள்ளநீரிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. போட்டி போட்டு பொருட்களை வாங்கியதால் பல கடைகளில் பொருட்கள் சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்தன. மக்கள் வெளியே வந்ததால் பெரும்பாலான சாலைகள் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.

பல இடங்களில் ஆவின் பால் வாங்க நீண்ட வரிசையில் மழை வெள்ளத்தில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். வியாசர்பாடி, எம்கேபி நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று பால் வாங்கிச்சென்றனர். மாநகரம் முழுவதும் தொலைத்தொடர்பு முடங்கியதால் மக்களால் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியவில்லை. மாநகராட்சி சார்பில் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதை தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி வழியாக உதவியும் கோர முடியவில்லை. வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள், சென்னையில் உள்ள உறவினர்களின் நிலை குறித்து அறிய முடியாமல் தவித்தனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் பல 100 டன் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்படவில்லை. ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 1000 பேரை வெள்ளப் பகுதிகளில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது. நீரை விரைவாக வெளியேற்ற என்எல்சி நிறுவனத்திடம் இருந்து 10 ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மாநகரை தூய்மைப்படுத்த வெளியூர்களில் இருந்து 5 ஆயிரம் நகர்ப்புற உள்ளாட்சி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், மின்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராது தொடர்ந்து ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், பிறகு கல்யாணபுரத்தில் நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டார். பிறகு, யானைகவுனியில் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். அதன் பின், மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து தூய்மைப்பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அதன்பின், கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: வரலாறு காணாத வகையில், பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. பெருமழை பாதிப்பை மனதில் வைத்து மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அறிக்கை அளித்தது. அதன்படி ரூ.4,000 கோடி மதிப்பில் பல்வேறு வெள்ளநீர் வடிகால் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாகவே வரலாறு காணாத வெள்ளத்தின் தாக்கம் கடந்த காலங்களை ஒப்பிடும்போது பெருமளவு குறைந்துள்ளது.

மேலும், அரசின் முன்னெச்சரிக்கை, உடனடி நிவாரணப் பணிகளால் உயிரிழப்புகள், மற்ற பிரச்சினைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 199 பேர் இறந்தனர். தற்போது அதைவிட அதிக மழை பெய்த நிலையில் 7 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதற்காக நான் வருந்துகிறேன்.

தற்போது, 9 மாவட்டங்களில் 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு பொட்டலங்கள் உட்பட தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. காலையில் இருந்து 1 லட்சம் பால் பாக்கெட் விநியோகம் உட்பட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தூய்மை பணியாளர்கள் அனைத்து பணிகளையும், முனைப்புடன் செய்து வருகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் முயற்சிகளின் விளைவாக, சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

ரூ.4,000 கோடியில் பணிகள் நடைபெற்றதால்தான் 47 வருடமாக பார்க்காத மழையில் இருந்து இன்று சென்னை தப்பி இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் இதை செய்து முடித்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:

மழை காரணமாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று இன்று கடிதம் எழுதப்போகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பேசவுள்ளனர். இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் 75 சதவீத இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் சூழ்ந்திருக்கின்ற காரணத்தினால், சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் விழுந்திருக்கிறது. அதற்காகதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறோம். அதுவும் இன்று அல்லது நாளைக்குள் சரிசெய்யப்பட்டுவிடும். நிவாரண உதவிகளைப் பொறுத்தவரை, மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அவர்கள் சொல்வதை பார்த்துவிட்டு, நம் நிதியாதாரத்தை பொறுத்து என்ன செய்யமுடியுமோ அதை செய்வோம். மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். இன்னும் நான்கைந்து நாட்கள் பொறுத்திருந்தால், நிச்சயமாக முழு நிவாரணங்களும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் அரசு செய்து தரும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE