சென்னை வெள்ளம் | வேளச்சேரி முதல் சைதாப்பேட்டை வரை - அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்!

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் வெள்ளம், புயல் அபாயத்தின்போது சென்னை நீருக்குள் மூழ்கி மீண்டும் மீண்டும் மீள்கிறது. முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாதிப்பு என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. `மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது வரலாறு காணாத அதிகனமழை. வழக்கத்தைவிட 29 சதவிகித மழை அதிமாக பெய்திருக்கிறது. புயல் கரையைக் கடந்தாலும், குடியிருப்பு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. அதன் விவரம்:

தாம்பரம்: 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியிருக்கிறது தாம்பரம் மாநகராட்சி. தாம்பரம் சிடிஓ காலனி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கிய குழந்தைகள் மற்றும் முதியவர்களை படகு மூலம் மீட்புப் படையினர் மீட்டிருக்கின்றனர். | அண்ணா நகர் மேற்கு: தங்களுடைய பகுதிகளுக்கு சுமார் மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படவில்லை. சரியாகக் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஏழு ஏரிகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் சாலைகளில் ஆறு போலப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியைப் படுத்தி உள்ளது. | அயனாவரம்: அயனாவரம் - மேடவாக்கம் சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். வீடுகளுக்குள்ளும் முழுமையாக மழை நீர் தேங்கி இருப்பதாகவும், கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் கலந்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் இருக்கும் மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேளச்சேரி: சென்னையில் இந்த முறையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது வேளச்சேரி. வேளச்சேரியில் பெய்த கனமழையால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், தங்களது உடைமைகளுடன் சொந்த ஊருக்கு மக்கள் புறப்படுகின்றனர். சென்னை வேளச்சேரி சாலை - ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட 80 அடி பள்ளத்தில் பெருமளவில் மழைநீர் தேங்கியது. அங்கு பணியாற்றிய இருவர் மழை நீரில் சிக்கிய நிலையில், அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாறு: சென்னை அடையாறு ஆற்றில் பல்வேறு இடங்களிலிருந்து வரும் 40,000 கன அடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. | ராமாபுரம்: ராமாபுரம் பகுதியில் மார்பளவுக்குத் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் மியாட் மருத்துவமனைக்குச் செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. மக்களின் வாகனங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் தண்ணீரில் அடித்துச் சென்றதாகத் தெரிவிக்கின்றனர். செம்மஞ்சேரி ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். மழை நீரை வெளியேற்ற அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

துரைப்பாக்கம் பல்லாவரம் சாலை: மழை நீர் தேங்கி இருப்பதால் துரைப்பாக்கம் பல்லாவரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. | அம்பத்தூா்: அம்பத்தூா் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூா் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் 3 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் புகுந்தது.

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையின் திடீர் நகருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு உரிய எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மதுரவாயல், ஆவடி ,மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்புப் படையினர் மீட்டனர். காண்க > தண்ணீர் நகரமான தலைநகரம் - சென்னை மழை பாதிப்புகள் | புகைப்படத் தொகுப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE