அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றிய அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் என்பவரிடம் அவருக்கு எதிரான வழக்கை (சொத்துக் குவிப்பு) மீண்டும் விசாரிக்காமல் இருக்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கினார். இது தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் டிச.1-ம் தேதி அங்கித் திவாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அங்கித் திவாரி பணியாற்றிய மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் டிச.1-ம் தேதி மதியம் சோதனை நடத்த மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் உள்ளிட்ட போலீஸார் சென்றனர். அவர்களை அங்கிருந்து அமாலாக்கத் துறை அதிகாரிகள், எங்களது உயரதிகாரியின் அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என வாக்குவாதம் செய்தனர். இருப்பினும், நீதிமன்றம், அமாலாக்கத் துறை உயர் அதிகாரியின் அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்ததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கித் திவாரியின் அறையில் மாலை முதல் அடுத்த நாள் காலை 7 மணி வரை விடிய விடிய சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் மூலம் அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களும், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களும் விசாரணைக்கென கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால், தமிழக டிஜிபிக்கு 2-ம் தேதி அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்குள் கடந்த 1-ம் தேதி இரவு சுமார் 35-க்கும் மேற்பட்டோர் புகுந்தனர்.

மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தவிர, பிறர் யார் என தெரிவிக்கவில்லை. அவர்கள் காவல் துறைக்கான சீருடைய அணியவில்லை. அங்கித் திவாரியின் அறைக்குள் சோதனை என்ற பெயரில் அங்கித் திவாரி அறைக்குள் 2-ம் தேதி 7 மணி வரை இருந்தனர். அவரது சிறையில் இருந்து வழக்கிற்கு தேவையின்றி சில ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். சோதனையில் ஈடுபட்ட டிஎஸ்பி சத்யசீலன், ஆய்வாளர்கள் சூரிய கலா, ரமேஷ் பிரபு, குமரகுரு, மதுரை வடக்கு தாலுகா வருவாய் ஆய்வாளர் வெற்றிவேலன், திருப்பாலை விஏஒ முத்துக்கிருஷ்ணன் தவிர, மற்றவர்கள் யார் என தெரியாத சூழலில் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், லஞ்ச ஒழிப்புத் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த அமலாக்கத் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், ''சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் மதுரை அமாலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டார். இதையொட்டி நீதிமன்றம் மற்றும் அமலாக்கத் துறையின் உயரதிகாரி ஒருவரின் அனுமதியை பெற்று மதுரை துணை மண்டல அமலாக்கத் துறையில் சோதனைக்கு சென்றோம். எங்களை உள்ளே விடாமல், அரசு பணி செய்யவிடாமலும் அங்கிருந்து அதிகாரிகள் தடுத்தனர். வேறு வழியின்றி காவல் துறையின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினோம். வழக்கு தொடர்பாக அங்கித் திவாரி அறையில் மட்டுமே சோதனையிடப்பட்டது. எங்களை பணி செய்யவிடாமல் தடுத்து, இடையூறு செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE