சிலிண்டர் விநியோகத்தில் சுரண்டல்: விழி பிதுங்கி நிற்கும் நுகர்வோர் @ உதகை

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: மனிதனின் அன்றாட அத்தியாவசிய தேவை உணவு. அந்த உணவு சமைக்க அவசியமானது சமையல் எரிவாயு.கிராமப்புறங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த வாய்ப்பிருந்தாலும், நகர்ப்புறங்களில் புகை மாசு, விறகு தட்டுப்பாடு காரணமாக மக்கள் சமையல் எரிவாயு அடுப்புக்கு மாறி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தை கொண்டு வந்து, ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கியது. இதைதொடர்ந்து, கிராமப்புறங்களிலும் எரிவாயு அடுப்புக்கு மக்கள் மாறிவிட்டனர். சமையல் எரிவாயு விலை விண்ணை தொட்டாலும், சிலிண்டரை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், எரிவாயுசிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனங்கள், கூடுதல் விலைக்கு விற்று மக்களை சுரண்டி வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோகரன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் பயன்பாடு அதிகம். மலைப் பகுதி என்பதால் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், தண்ணீரைகூட சூடாக்கி குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது, அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்துள்ளது. மேலும், விறகு விற்பனை செய்யப்படாததால், மக்கள் சமையல் எரிவாயுவை நம்பிதான் இருக்கின்றனர். ஒரு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965.25. ஆனால் ஊழியர்கள் ஒரு சிலிண்டருக்கு ரூ.1,000 வசூலிக்கின்றனர். இதற்கு தூக்கு கூலி என கூறுகின்றனர்.

ஆனால், கிராமப்புறங்களில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் வாகனத்தை ஓர் இடத்தில் நிறுத்திவிடுகின்றனர். நுகர்வோர் காலி சிலிண்டரை வீட்டிலிருந்து சுமந்து சென்று, எரிவாயு நிரம்பிய சிலிண்டரை வாங்கி மீண்டும் சுமந்து வீடுகளுக்கு செல்கின்றனர். கூடுதல் விலை கொடுத்தும், சிலிண்டரையும் தாங்களே சுமக்கின்றனர். அத்தியாவசிய பொருளான சமையல் எரிவாயு கிடைக்காமல் போய்விடும் என்ற பதற்றத்துடன், அப்பாவி கிராம மக்கள் சிலிண்டரை வாங்கி செல்கின்றனர்.

குன்னூரை அடுத்த கோடேரி கிராமத்தில்
சிலிண்டரை சுமந்து செல்லும் பெண்.

இதுகுறித்து முறையிடும் சமூக ஆர்வலர்களிடம், ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடு கின்றனர். நுகர்வோர் குறைதீர்க்க 3 மாதங்களுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டிய ஆலோசனை கூட்டம், பல மாதங்களாக நடத்தப்படாமல் போன அலட்சியத்தால், இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்கிறது. நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்கின்றன. என்று முடியும் இந்த மலை மக்களின் அவலம் என தெரியவில்லை. பொதுவாக, நீலகிரி மாவட்டத்தில் மக்கள் முன்வந்து புகார் அளிக்கமாட்டார்கள் என்பதை சாதகமாக்கிக் கொண்டு, விநியோகத்தில் விதிமீறல் நடைபெறும் போக்குதான் காணப்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தவேண்டும். விநியோகிப்பாளர்கள் விதிமீறலில் ஈடுபடும்போது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இந்நிலையில், சிலிண்டர் தூக்கும்தொழிலாளர்களுக்கு முகவர்கள் சொற்ப ஊதியம் மட்டுமே வழங்குவதால், நுகர்வோரிடம் சிறிய தொகை பெறுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘முகவர்கள் சிலிண்டர் தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை. சொற்ப தொகைதான் அளிக்கின்றனர். உடல் வலியில் சிலிண்டர்களை நாங்கள் நுகர்வோர் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்குகிறோம். நகர்ப்புறங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் பல படிகள் ஏறி, இறங்கி சிலிண்டர் விநியோகிக்கிறோம். இதற்காக நுகர்வோரே ரூ.10, ரூ.20 என கொடுக்கின்றனர். ஒரு நாளைக்கு 100 சிலிண்டர் விநியோகித்தால் ரூ.500 கிடைக்கும். இந்த தொகையை வைத்தே எங்கள் வாழ்வாதாரம் உள்ளது’’ என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE