தாமிரபரணி ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீடிக்கும் மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 209 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடனா ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் மற்றும் ஆங்காங்கே மழை பெய்துவரும் நிலையில் காட்டாற்று வெள்ளம் ஆகியவை தாமிரபரணியில் சேர்கிறது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் தடுப்பணையின் நீர் இருப்பு அதிகரித்தது.

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் கரையோர செடி, கொடிகளை
மூழ்கடிக்கும் அளவுக்கு பரந்து விரிந்து பாய்ந்த தாமிரபரணி.

இதனால் இந்த தடுப்பணையிலிருந்து 5,340 கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் திறந்துவிடப்பட்டிருந்தது. இதனால் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறையிலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில் மண்டபங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் நேற்று கரைபுரண்டது. இதுபோல் தாமிரபரணி கரையோர படித்துறைகள் மற்றும் கல்மண்டபங்களை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. எனினும், முக்கூடலுக்கு மேற்கே பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ஊர்களில் தாமிரபரணியில் வெள்ளம் ஏதுமில்லை. வடக்கு அரியநாயகிபுரத்துக்கு கிழக்கே மட்டுமே தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.

மேக்கரையில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு: தென்காசி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 37 மி.மீ. மழை பதிவானது. தென்காசி, சங்கரன்கோவிலில் தலா 6 மி.மீ., குண்டாறு அணையில் 4.40 மி.மீ., செங்கோட்டை, கருப்பாநதி அணை, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

மேக்கரை- அச்சன்கோவில் மலைப் பாதையில் மண், கல் சரிந்து விழுந்ததால்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

தொடர் மழையால் ஏற்கெனவே குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பிவிட்ட நிலையில், நேற்று ராமநதி அணையும் நிரம்பியது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையில் நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. கடனாநதி அணை நீர்மட்டம் இரண்டரை அடியும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் மேக்கரை- அச்சன்கோவில் மலைப் பாதையில் பாறைகள், மண் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகள், மண் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்றது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 115.70 அடியாக இருந்தது. இதுபோல் சேர்வலாறு நீர்மட்டம் 3 அடியும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஓரடியும் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,745 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 209 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 130.05 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 79.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 755 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 7 மி.மீ., கொடுமுடியாறு அணைப்பகுதியில் 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE