செல்போன் நெட்வொர்க் பிரச்சினையால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செயல்படவில்லை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை முழுவதும் செல்போன் நெட்வொர்க் பிரச்சினையால் மெட்ரோ பயணத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை முழுவதும் செல்போன் நெட்வொர்க் பிரச்சினையால் மெட்ரோ பயணத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம். சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படவில்லை. மெட்ரோ ரயிலில் பயணிக்க, ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிறு மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதிகனமழையாக கொட்டியது. மீனம்பாக்கத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும், செல்போன் நெட்வொர்க் பிரச்சினையும் தொடர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE