மிக்ஜாம் புயல் விவகாரம் | “மத்திய அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "மிக்ஜாம்' புயல் விவகாரம் தொடர்பாக நேற்று, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்த சூழலில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டதால் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ”மிக்ஜாம்' புயல் விவகாரம் தொடர்பாக நேற்று, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை. இன்று, இந்தப் பிரச்சினையை மீண்டும் எழுப்பவிருக்கிறேன், ஏனெனில், அரசின் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கிடைக்கும் அனைவரின் உதவியும் அவசியமானது. நிலைமை மோசமடைந்து வருகிறது. உயிரிழப்புகள் பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இந்தப் பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இன்று மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE