மழை படிப்படியாகக் குறையும், காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்த சூழலில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டதால் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. இடைவிடாது பெய்த அதிகனமழையால் சென்னை மாநகரம் நேற்று ஸ்தம்பித்தது. போக்குவரத்து, வணிகம் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை காட்டுப்பாக்கத்தில் 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மிக்ஜாம் தீவிர புயல் தற்போது நெல்லூருக்கு வடகிழக்கில் சுமார் 30 கிமீ தொலைவிலும் சென்னைக்கு வடக்கில் சுமார் 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே பாபட்லா எனும் பகுதியில் இன்று முற்பகல் கரையைக் கடக்கிறது. மழை படிப்படியாகக் குறையும். இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 10 மாவடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு விமான சேவை தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE