‘மிக்ஜாம்’ புயலால் வரலாறு காணாத அடைமழை: ஸ்தம்பித்தது சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. இடைவிடாது பெய்த அதிகனமழையால் சென்னை மாநகரம் நேற்று ஸ்தம்பித்தது. போக்குவரத்து, வணிகம் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் மிகாம்' புயல் நேற்று உருவானது. இது, நேற்று இரவுமுதல் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று 'தீவிரபுயலாக சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவில் நிலவியது. இது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை, நெல்லூருக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே, பாபட்லாவுக்கு அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இப்புயல் நேற்று முன்தினம் மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்க ளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதிகனமழையாக கொட்டியது. மீனம்பாக்கத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செமீ., ஆவடியில் 28செ.மீ., விமான நிலையம், ஆலந்தூர் ஆகிய இடங்களில் தலா 25 செ.மீ., அடையார், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய இடங்களில் தலா 23 செ.மீ., மாமல்லபுரம், சென்னை எம்ஜிஆர்.நகர், கோடம்பாக்கம். தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 22 செ.மீ., வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், டிஜிபி அலுவலகம், பள்ளிக்கரணை, அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 21 செ.மீ., பெரம்பூர், ஐஸ் ஹவுஸ், செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 20 செ.மீ., அயனாவரம், தரமணி, சத்யபாமா பல்கலைக்கழகம், அண்ணா நகர், செங்கல்பட்டு மாவட்டம் விஐடி சென்னை வளாகம் ஆகிய இடங்களில் தலா 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் மாநகரமே வெள்ளக்காடானது. சாலைகளெங்கும் வெள்ளநீர் தேங்கியதால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளநீரின் நடுவே இயக்கப்பட்ட இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பல பழுதாகி நின்றன. அவற்றை தள்ளிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், தங்கள் உடைமைகளை பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஆய்வு வாகனங்களும் மழைநீரில் சிக்கியுள்ளன. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலும் வெள்ளநீர் புகுந்தது. அந்த வளாகம் நீச்சல் குளம்போல் காட்சியளித்தது. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, தியாகராயநகர் மேட்லி சுரங்கப்பாதை உள்ளிட்ட 17 சுரங்கப்பாதைகள் வெள்ளநீர் தேங்கியதால் மூடப்பட்டன. பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று மாலை 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட் டது. இதனால், அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கியது. பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இடைவிடாத மழையால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியவில்லை. பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், அப்பகுதிகளில் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று கடுமையாக பாதிக்கப் பட்டது. மாநகரில் மொத்தம் 254 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே 70 வயது முதியவரின் உடலும், பட்டினப்பாக்கம் மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகே 60 வயது முதியவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளன. எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லையில் லோன்ஸ்கொயர் சாலையில் திண்டுக்கல்லை சேர்ந்த பத்மநாபன் (50), துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் கணேசன் (70) ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்தனர். பெசன்ட் நகரில் மரம் விழுந்து முருகன் (35) என்பவர் உயிரிழந்தார். வெள்ளநீர் வடியாததால் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அரசுத் துறைகளால் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. இன்று மழை விட்டதும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என தெரிகிறது.

45 ஆயிரம் கனஅடி திறப்பு: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு நேற்று இரவு 7 மணியளவில் விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. ஆற்றங்கரையோரங்களில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்