புயல் பாதிப்பு பகுதிகளை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பேர் வரவழைக்கப்படுகின்றனர்: நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் புயல் பாதிப்பு பகுதிகளை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை செயலர்த.கார்த்திகேயன் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறைமற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறைமற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும். முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்குவதற்கு ஏதுவாக உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913, 25619206/207/208 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109-ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் ஆலோசனை: இதனிடையே சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா,மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் தற்போது வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணி வரையிலான 28 மணி நேரத்தில் 33 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மாநகரின் ஆண்டு சராசரி மழைப் பொழிவில் 3-ல்ஒரு பங்கு. புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ஆறுகளில் இருந்து வரும் நீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 15 நிவாரண முகாம்களில் 1,845 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2.43 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனர்.

இதனிடையே நகராட்சி நிர்வாகத்துறை செயலர் த.கார்த்திகேயன் பின்னர் கூறும்போது, சென்னை மாநகரை தூய்மையாக்க திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்டமாவட்டங்களில் இருந்துநகர்ப்புற உள்ளாட்சி பணியாளர்கள் 5 ஆயிரம் பேர், லாரி மற்றும் உபகரணங்களுடன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீரை வெளியேற்ற நிறுவப்பட்ட மோட்டார்களும் நீரில் மூழ்கியதால், வெளியூர்களில் இருந்துகொண்டுவரப்பட உள்ளது. அடையாற்றின் கரையோர பகுதிகளில்வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE