விடிய விடிய பெய்த கனமழையால் ஓஎம்ஆர் சாலையில் வெள்ளம்: தீவாக மாறியது கேளம்பாக்கம்

By செய்திப்பிரிவு

கேளம்பாக்கம்: விடிய விடிய பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறிய மழைநீர் ஓஎம்ஆர் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்போரூர்-கேளம்பாக்கம் இடையே காலவாக்கம், செங்கண்மால் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சாலை குறுக்கே பெருக்கெடுத்து ஓடியது.

தையூர் ஊராட்சியில் அடங்கியசெங்கண்மால் பகுதியில் தரைப்பாலம் பணி நடைபெற்று வருவதால், தரைமட்ட பாலத்தையும் தாண்டி, சாலையில் மழை வெள்ளம் சென்றது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாகச் செல்வதை தற்காலிகமாக தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேளம்பாக்கம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில் சாத்தங்குப்பம், ஜோதி நகர் மற்றும் தையூர் ஊராட்சி ஆகியபகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் கால்வாய்கள் மூலம் ஓஎம்ஆர் சாலையைக் கடந்து பக்கிங்ஹாம் கால்வாயைச் சென்றடையும். தற்போது, தொடர்மழை காரணமாக குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனால், அப்பகுதியே தீவு போல் காட்சி அளிக்கிறது.இதனால் வீட்டிலிருந்து வெளியேவர முடியாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் படூர், தாழம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடியிருப்பு வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE