பூண்டி ஏரியில் 45 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கன அடி நீர் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்/ குன்றத்தூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்துதொடர்ந்து நீர்வரத்து அதிகரித் ததால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்குபருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியவற்றிலிருந்து ஏற்கெனவே நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் அதிகன மழை, கன மழைபெய்து வருகிறது. இதனால், முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதில், நேற்று காலை 10 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,200 கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட அந்த ஏரியின் நீர் இருப்பு, 2,669 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 33.50 அடியாகவும் இருந்தது.

ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம்2 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீரை நீர்வள ஆதாரத் துறையினர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட்டனர். இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

நேற்று இரவு 7 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆகவே,நேற்று இரவு 7.30 மணியளவில், பூண்டி ஏரிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள சுமார் 30 கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரியிலிருந்து கடந்த நவம்பர் 30-தேதி காலைமுதல் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று காலை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட அந்த ஏரியின் நீர் இருப்பு, 2,910 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 20.20 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. ஆகவே, நேற்று காலை 10.30 மணியளவில் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி முதல் விநாடிக்கு3 ஆயிரம் கன அடி என வெளியேற்றப்பட்டு வந்த நீர் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,228 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 22.41 அடியாகவும் இருந்தது. அப்போது,நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆகவே,செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை, விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர், கூடுதலாக நீர் வெளியேற்றப்படும் என, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

30 கிராமங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE