மிக்ஜாம் புயல் பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர், எம்எல்ஏக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், களத்தில் பணியாற்றும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரியிடம் தொலைபேசி மூலமாக பேசி இருந்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (டிச.4) முகாம் அலுவலகத்திலிருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், இ. கருணாநிதி, இ. பரந்தாமன், எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் திரு.வி.க. நகர் கண்காணிப்பு அலுவலர் கணேசன், இ.ஆ.ப., ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர், மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் எழிலன் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் 30,000 குடும்பங்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 16 முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திரு.வி.க. நகர் கண்காணிப்பு அலுவலர் கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது கணேசன் அவர்கள், கொளத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் பகுதியில் 20,000 மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் விவரங்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் உணவைத் தவிர, கூடுதலாக மற்றொரு இடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், எத்தனை முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை கேட்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி 8 இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டுள்ளதோடு, போர்வையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷிடம் முதல்வர் தொலைபேசி வாயிலாக பேசியபோது, 158 பேர் ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

நிறைவாக, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு முதல்வர், கனமழையால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். முகாமில் தங்கியுள்ள பொதுமக்களிடம் முதல்வர் தொலைபேசியில் பேசியபோது, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்து, தைரியமாக இருங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE