மிக்ஜாம் புயல் | 5 பேர் உயிரிழப்பு முதல் போக்குவரத்து மாற்றம் வரை - காவல் துறை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழையால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான காவல் துறை அறிக்கை: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளின் தற்போதைய போக்குவரத்து நிலை: இன்று காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன.

சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின்(DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:

1. இன்று காலை (04.12.2023), கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. மேற்படி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2. 1500 மணிக்கு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாரில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர்.

3. N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர்.

4. R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராம் தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.

5. கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர்.

6. E-1 மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர்.

7. S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.

8. 6 நபர்கள் (2 முதியவர்கள், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஶ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

9. 37 மரங்கள் அகற்றப்பட்டது நீங்கலாக, வாலாஜா சாலை, கோட்டூர்புரத்தில் உள்ள சூர்யா நகர், திருவள்ளுவர் நகர், ஶ்ரீநகர் காலனி, ஜாபர்கான்பேட்டை, வடபழனி, தரமணி, கே.கே.நகர், பட்டினப்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவான்மியூர், திரு.வி.க நகர் மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் விழுந்த மரங்கள் (13) மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டன.

நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்: கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, C.B. சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதைRBI சுரங்கப்பாதை, கோயம்பேடு, புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை. சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல்: சென்னை பெருநகரில் 50 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

பதிவாகியுள்ள இறப்புகள்: 5

1. H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2. B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோன் ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பத்மநாபன் (ஆ/50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பிரேதம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3. J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன் (ஆ/35) என்பவர் மீது மரம் விழுந்ததால் உயிரிழந்தார்.

4. E-5 பட்டினப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகில் இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5. J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் நகர், செல்வ விநாயகர் கோயில் தெருவில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன் (ஆ/70) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ், வ/43, த/பெ.பெருமாள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகன் (37 வயது) என்பவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த 72 வயது பெண்மணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பிரசவ வலியிலிருந்த கொளத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான்கு கர்ப்பிணிப் பெண்கள் புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மீட்கப்பட்டு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரசவ வலியிலிருந்த கர்ப்பிணிப் பெண் அயனாவரத்திலிருந்து மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்