புதுச்சேரி புயல் நிலவரம்: முதல்வரிடம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புயலையொட்டி புதுச்சேரி நிலவரம் குறித்து முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். அப்போது, மழைக்குப்பின்னர் சேதங்கள் குறித்து மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து, தேவைப்படும் நிவாரண உதவிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு தரவேண்டும் என்று முதல்வர் கோரியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிச்சாங் புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இப்புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகளில் பாதிப்பு மிகுதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ரங்கசாமியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி, "வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்சாம் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

அனைத்துத் துறைகளும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் மழைக்குப் பின்னர் சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்படும். தேவைப்படும் நிவாரண உதவிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE