“5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு தரும் செய்தி இதுதான்” - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ராகுல் காந்தியின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மோடி ஆட்சியை அகற்ற முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்படுவது தான் 5 மாநில தேர்தல் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தருகிற செய்தி ஆகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றமளிக்கிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கடுமையான பரப்புரை மேற்கொண்டதை அனைவரும் அறிவார்கள். நடைபெற்ற தேர்தலில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்தியலை முன்வைத்ததோடு, மாநிலத் தலைவர்களை மையப்படுத்தி தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் அமைந்திருந்தது.

மத்திய பிரதேசத்தில் கமல் நாத் , ராஜஸ்தானில் முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சராக இருந்த பூபேஷ் பாகேல், தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி ஆகியோரை முன்னிலைப்படுத்தி தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் அமைந்திருந்தது. தேர்தலை எதிர்கொள்வதற்கான முழு வியூகங்களை அமைப்பதற்கு மாநில தலைமைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி ராஜஸ்தான் மாநிலத்தில் 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 39.3 சதவீதமும், 100 இடங்களும் ஆகும். தற்போது 2023 இல் 39.53 சதவீத வாக்குகளை பெற்று 69 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் பாஜக கடந்த தேர்தலைவை விட தற்போது 2.69 சதவீதம் அதிகம் பெற்று 115 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கப்போகிறது.

அதே போல மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பெற்றதை விட தற்போதைய தேர்தலில் ஏறத்தாழ 0.54 சதவீத வாக்குகள் தான் குறைவாக பெற்றிருக்கிறது. ஆனால் பா.ஜ.க. கூடுதலான சதவீத வாக்குகளை பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொருத்த வரையிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 1.12 சதவீதம் தான் குறைந்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க. கூடுதலான சதவீத வாக்குகளை பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 3 மாநில சட்டமன்ற தேர்தலிலும் 2018 இல் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தை ஏறத்தாழ மீண்டும் பெற்றிருந்தாலும், வெற்றிபெற்ற இடங்கள் குறைந்திருக்கிறது.

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 4.91 கோடி வாக்குகளை பெற்றுள்ளது . ஆனால் பாஜக 4.8 கோடி வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது. இந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்து விடவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம் அவ்வளவுதான்.

கடந்த 2003 இல் இதே மத்திய பிரதேச, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் 2004 இல் நடைபெற்ற மக்களவை தேத்தலில் இதே மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை நிச்சயம் தோற்கடிக்க முடியும்.

பிரதமர் மோடி ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு பெருகவில்லை. விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. விலைவாசி குறையவில்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் வாங்கும் சக்தியோ, வாழ்க்கைத் தரமோ உயரவில்லை. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியிடம் அதிகாரம் குவிந்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் சொத்துக்களை குவித்திருக்கிறார்கள்.

அதற்கு பலனாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க. நிதியை குவித்திருக்கிறது. தேர்தல் காலத்தில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் நிதி ஆதாரங்களைப்போல காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத நிலையில் தேர்தல் களம் சமநிலைத் தன்மையோடு இல்லை. இத்தகைய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய வியூகத்தையும், கருத்தியலையும் மக்கள் முன் காங்கிரஸ் கட்சி முன்வைக்க வேண்டும்.

ஏற்கனவே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போலவே தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கப்போவது மிகுந்த ஆறுதலை தருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த பெருமையை மீண்டும் பெற்றிருக்கிறோம். அங்கே ரேவந்த் ரெட்டி தலைமையில் தேர்தலில் எதிர்கொண்டு கடுமையான பரப்புரையின் மூலம் 2018 இல் பெற்ற வாக்குகளை விட 11 சதவீதம் கூடுதலாக பெற்று அதிக இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமையப்போகிறது. கடுமையான உழைப்பின் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதற்கு தெலங்கானா ஒரு உதாரணமாக திகழ்கிறது.

கடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலின்போது தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பரப்புரையில் முன்வைத்த கருத்தியலின் அடிப்படையில் மாநில காங்கிரஸ் அமைப்புகள் அதை மக்களிடம் மேலும் கொண்டுசென்றார்களா? என்பது மிகுந்த ஆய்வுக்குரியது. அத்தகைய கருத்துக்களை தீவிரமாக முன்வைத்திருந்தால் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை முறியடித்திருக்கலாம்.

அதற்கு மாறாக ஒரு சில மாநிலங்களில் பா.ஜ.க.வின் கொள்கையில் மாறுபட்ட கட்சியாக காங்கிரஸ் முன்னிலைப் படுத்தப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அத்தகைய அணுகுமுறையினால் தான் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்து கூடுதலான இடம் பெறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே இருக்கிற கொள்கை போராட்டம் என்பது நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. அத்தகைய போராட்டத்தை தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

அவர் வகுக்கிற கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து மோடி ஆட்சியை அகற்ற முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்படுவது தான் 5 மாநில தேர்தல் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தருகிற செய்தி ஆகும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்