சென்னையில் பல இடங்களில் 20 செ.மீ. மேல் மழை பதிவு: பெருங்களத்தூரில் சாலையில் சென்ற முதலையால் மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் 20 செ.மீ மேல் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பெய்துள்ளது. ஆவடி-28 செ.மீ, அடையாறு - 23.5 செ.மீ மழை, மீனம்பாக்கம் 23 செமீ, கோடம்பாக்கம் 21.8 செ.மீ மழை, சோழிங்கநல்லூர் - 21.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதற்கிடையில் இன்று (டிச.4) பிற்பகல் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து தெற்கு ஆந்திரா நோக்கிச் செல்லும். புயல் காரணமாக சென்னையில் இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்களத்தூரில் முதலை: சென்னை பெருங்களத்தூரில் சாலையில் முதலை நடந்து சென்ற வீடியோ வெளியான நிலையில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குள் மக்கள் இறங்க வேண்டாம் என்று வனத்துறை அலுவலர் கூறியுள்ளார். அந்தப் பகுதிக்கு வனத்துறை ஊழியர்கள் அனுப்பப்பட்டு முதலை தென்பட்டால் அது மீட்கப்பட்டு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், ”சென்னை நீர்நிலைகளில் சில முதலைகள் உண்டு. இப்போது புயல் மழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் இந்த முதலை வெளியே வந்திருக்கலாம். பொதுமக்கள் யாரும் அதைச் சீண்டி துன்புறுத்தாத வரையில் அதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றார்.

அமைச்சர் நேருவுடன் முதல்வர் ஆலோசனை: இதற்கிடையில் சென்னையில் மழை வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அமைச்சர் நேரு, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மேயர் பிரியா தலைமையிலான குழுவினர் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE