`மிக்ஜாம்’ புயல் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு குழு

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் 100-க்கும்மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது. இதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், இந்திய வானிலைஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், அனைத்து விமான நிறுவனங்களின் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலதரப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், புயல் கரையை கடந்து இயல்பு நிலை திரும்பும்வரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாயை தொடர்ந்துகண்காணித்து நீர் தேங்காதபடிவெளியேற்ற கூடுதல் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேவையிருந்தால் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள்விமானங்களை புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்திக் கொள்ளலாம்.

சென்னை விமான நிலையத்தில் தங்கியுள்ள பயணிகள், விமானநிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட சென்னை விமான நிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மின்தடைகள் ஏற்பட்டால், அவசர தேவைக்கு தேவையான, ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் ஓடும் அடையாறு ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகள் பெறப்பட்டு, உடனடியாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ப விமான நிறுவனங்கள், தங்களது விமான இயக்கம்பற்றி முடிவு செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில் உள்ள அனைத்து தரப்பு ஊழியர்களும் விடுப்பு இல்லாமல் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE