உயரும் காய்கறி விலை: தக்காளி, வெங்காயம் மீண்டும் விலை கூடுவதால் மக்கள் கவலை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் காய்கறிகள் விலை அதிகரித்து வருவது, நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதிப்படைய வைத்துள்ளன.

தமிழகத்தில் காய்கறிகள் உற்பத்தி நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. அதனால், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை கர்நாடகா, ஆந்திரா மட்டுமில்லாது அதிகளவு வடமாநிலங்களில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால், காய்கறி பயிர்கள் ஏராளம் அழிந்துவிட்டன. தக்காளி, சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்றவை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை காய்கறிகள் சந்தைகளுக்கு குறைந்தளவே வருகின்றன. அவை தரமில்லாமல் வருகின்றன.

இதுகுறித்து மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘‘தக்காளி கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.50-க்கு விற்றது. தற்போது தென் தமிழகத்தில் மழை நின்றதால் தக்காளி வரத்து ஒரளவு அதிகரிக்கத் தொடங்கியதால் 15 கிலோ கொண்ட தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்கிறது. கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கிறது. சின்ன வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்கிறது. இதுவரை கிலோ ரூ.30 முதல் 40 க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது ரூ.50 முதல் ரூ.60-க்கு விற்கிறது.

கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.80, பீட்ரூட் கிலோ ரூ.30 முதல் ரூ.40, கத்திரிக்காய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.50, முட்டைகோஸ் ரூ.30, சேனை ரூ.50, நூக்கல் ரூ.40 முதல் ரூ.50, சீனவரக்காய் ரூ.40 முதல் ரூ.60, புடலை ரூ.30 முதல் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30 முதல் ரூ.40 விற்கிறது. காய்கறிகள் வரை கடந்த வாரத்தை ஒப்பிடும்போத கணிசமாக அதிகரித்துள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE