மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 125 அடியாக இருந்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் உட்பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே மழையில்லை. கடந்த இரண்டு நாட்களாக நல்ல வெயில் அடித்தது. ஆனாலும் நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலையிலும், மலையடிவாத்தை ஒட்டியுள்ள ஊர்களி்லும் நல்ல மழை பதிவானது. இதன் காரணமாக களக்காடு தலையணை, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடியாத அளவுக்கு நேற்று காலை வெள்ளம் பெருக்கெடுத்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 83.80 மி.மீ. மழை கொட்டியது.

மாவட்டத்திலுள்ள பிற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 52, மணிமுத்தாறு- 49.40, ஊத்து- 30 ராதாபுரம்- 7, சேர்வலாறு அணை- 27, மாஞ்சோலை- 25, நாலுமுக்கு- 20, பாபநாசம்- 16, காக்காச்சி- 15, களக்காடு- 12.80, சேரன்மகாதேவி- 1. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து நேற்று காலையில் 110.80 அடியாக இருந்தது.

156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 121 அடியாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 125 அடியாக உயர்ந்தது. திருநெல்வேலி மாநகரில் நேற்று பகல் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கியது. தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மழை தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இரவில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 54.20 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 48 மி.மீ., ஆய்க்குடியில் 39 மி.மீ., தென்காசியில் 37 மி.மீ., கருப்பாநதி அணையில் 28 மி.மீ., அடவிநயினார் அணையில் 23 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 12 மி.மீ., சங்கரன்கோவில், சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலையில் வெள்ளம் குறைந்த பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். குமரி மாவட்டத்தில் மீண்டும் நேற்று மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 55 மி.மீ., மழை பதிவானது.

குமரி மாவட்டம் மயிலாடியில் 55 மி.மீ., பதிவு - கன்னியாகுமரி உட்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை வரை மிதமான மழை பெய்தது.

மயிலாடியில் அதிகபட்சமாக 55 மி.மீ. மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம்: பூதப்பாண்டி 15 மி.மீ, களியல் 25, கொட்டாரம் 23, குழித்துறை 29, நாகர்கோவில் 34, குளச்சல் 24, இரணியல் 13, திற்பரப்பு 20, அடையாமடை 21, குருந்தன்கோடு 13, முள்ளங்கினாவிளையில் 21 மி.மீ. சுருளோடு, தக்கலை, மாம்பழத்துறையாறு, ஆரல்வாய்மொழி மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

மலையோரப் பகுதியான பாலமோரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருகிறது. ஏற்கெனவே அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளுக்கு நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது.

இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வந்திருந்தனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 44.18 அடியாக இருந்தது. அணைக்கு 425 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 403 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.53 அடியாக உள்ளது. 225 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையில் நீர்மட்டம் 15.84 அடியாக உள்ளது. அணைக்கு 119 கன அடி தண்ணீர் வருகிறது. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.94 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8 அடியாகவும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE