மிக்ஜாம் புயல் | சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பொது விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.4 - திங்கள்கிழமை) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுபெறக்கூடும்.இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.4) மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடதமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொள்ளக்கூடும். அதன்பின்னர், இது வடக்கு திசையில், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து டிச.5-ம் தேதி காலை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழையும், பலத்த காற்று வீசக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 மாவட்டங்களுக்கும் நாளை (டிச.4) பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசிய சேவை அளிக்கும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால், குடிநீர், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மின் துறை, போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.4 - எங்கெல்லாம் அதி கனமழை? - திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழுமையாக வாசிக்க > டிச.5 காலையில் கரையைக் கடக்கும் ‘மிக்ஜாம்’ புயல் - தமிழகத்தில் எங்கெல்லாம் அதி கனமழை வாய்ப்பு?

இதனிடையே, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடரும் கனமழை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே கனமவை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசுவதால், இதமான சூழல் நிலவி வருகிறது. புயல் உருவானதைத் தொடர்ந்து, தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலத்த காற்று எச்சரிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையுடன் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்கி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை குறுந்தகவல் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE