கும்மிடிப்பூண்டி அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம்: 20+ கிராமங்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த காரணி ஊராட்சியில் தரைப் பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாத்தம்மன் கோயில் பகுதிக்குச் செல்வதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், பாலேஸ்வரம், மங்களம், சந்திராபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருவார்கள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது. அத்துடன், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரணி-அஞ்சாத்தம்மன் கோயில் இடையில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.

மேலும், ஆரணி சமுதாயக் கூடம் எதிரில் இருந்து மங்களம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாதையும் வெள்ள நீரில் மூழ்கியது. இந்த ஆபத்தை உணராமல் கிராம மக்கள் சிலர் அவ்வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், பெரியபாளையம், ஆரணி போலீஸார் அப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE