உருவானது ‘மிக்ஜாம்' புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது என்றும், சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும். வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோரும் சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து கண்காணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் அளவு 500 கன அடி ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 1, 500 கனஅடியாக குறைந்துள்ளது. உபரி நீர் வெளியேற்றம் காரணமாக அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (4-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை (4-ம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE