திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி சிக்கியது எப்படி?

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் பெற்ற லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

டாக்டர் சுரேஷ்பாபு அளித்த புகாரின் அடிப்படையில், அன்கித் திவாரி மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:

2018-ல் வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாக என் மீதும் (டாக்டர் சுரேஷ்பாபு), எனதுமனைவி மீதும் திண்டுக்கல் மாவட்டலஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நடந்த விசாரணையில், என் மீது துறை ரீதியானநடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோ பர் 29-ம் தேதி எனது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் பேசிய ஒருவர், வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான விசாரணைக்காக திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்.

இதன்படி நான் அக்டோபர் 30-ம்தேதி மதுரை அமலாக்கத் துறை அலுவலகம் சென்றேன். அங்கு வந்த ஹிர்த்திக் என்பவர், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், இது சம்பந்த மாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்குமாறு தகவல் வந்துள்ளதாகவும் தெரி வித்தார். மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க தங்களுக்கு ரூ.3 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறினார். அந்த தொகையும் தனது மேல் அதிகாரிக்கு கொடுப்பதற்காகவே கேட்பதாக தெரிவித்தார். பின்னர், ரூ.51 லட்சம் கொடுத்தால் போதும் என்றார்.

அவர் கூறியபடி, நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலையில் சென்ற போது வாட்ஸ்-அப் அழைப்புமூலம் தொடர்பு கொண்ட அந்த நபர், எனது காரை நிறுத்தச் சொல்லி,வேறு ஒரு காரில் இருந்து இறங்கி அருகில் வந்தார். ரூ.20 லட்சம் இருப்பதாகத் தெரிவித்தேன்.

மீதி பணத்தை எப்போது கொடுப்பீர்கள் எனறு கேட்டார். நான் அடுத்த வாரம் தருவதாகத் தெரிவித்தேன். பின்னர், எனது ஓட்டுநர் எடுத்துவந்த பணப் பையை,அமலாக்கத் துறை அதிகாரி தனது கார் டிக்கியில் வைக்குமாறு கூறினார். இந்த நிகழ்வுகள் எனதுகாரின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ளன.

தொடர்ந்து, வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் மீதி பணம் கேட்டு மிரட்டிக் கொண்டே இருந்தார். மீதி பணத்தில் ரூ.20 லட்சத்தை டிச. 1-ம் தேதி காலை வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால், போலீஸில் புகார்அளித்தேன். இவ்வாறு முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் சிக்கின:

கைது செய்யப்பட்ட அன்கித் திவாரி `ஹிர்த்திக்' என்ற பெயரிலேயே மருத்துவரிடம் பேசியுள்ளார். பெயரை மாற்றிக் கூறினால், போலீஸில் சிக்க மாட்டோம் என்று கருதியுள்ளார். அரசு மருத்துவர் சுரேஷ்பாபு, லஞ்சப் பணத்தை கொடுத்தபோது, அவரது காரின் முன்பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளையும், அமலாக்கத் துறை அதிகாரி அனுப்பிய குறுஞ்செய்தி ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

மதுரை சிறைக்கு மாற்றம்

இதற்கிடையில், அமலாக்காத் துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல் சிறையில் இருந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE