புதுச்சேரி: அசாம் மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர் மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்திருந்த அசாம் மாநிலத்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: “நான் முழு நேர ஆளுநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்களை சென்று பார்ப்பதில் என்ன தவறென்று எனக்கு தெரியவில்லை. மக்களை நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். கேள்வியும் கேட்கின்றனர். நேரடியாக சென்றால்தான் நமக்கு என்ன பிரச்சனை என்பது தெரியும். மக்களை சந்திப்பதில் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செல்கிறேன்.
ஆளுநர், அமலாக்கத் துறை, வருமானவரித் துறை என அனைத்தையும் பாஜகவில் சேர்த்து விடுகின்றனர். மற்ற எல்லாவற்றையும் பாஜகவிலேயே சேர்த்து விடுங்கள். தமிழக போலீஸை திமுக போலீஸ் என சொல்லலாமா? அமலாக்கத் துறையில் ஒரு பிரச்சினை நடந்துள்ளது. ஓர் அமைச்சர் வீட்டுக்கு சென்றார்கள். அமைச்சர் வீட்டிலிருந்து கட்டி, கட்டியாக, பெட்டி, பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல எல்லோர் வீடுகளுக்கும், முதல்வர் வீட்டுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றம் சொல்ல முடியுமா? எல்லா துறையிலும் பிரச்சினை இருக்கலாம், பிரச்சினைக்குரிய அதிகாரிகள் இருக்கலாம். அது மத்திய அரசு அமைப்பு, நாங்கள் மாநில அரசு அமைப்பு ஆகவே, மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்துவோம் என கூறலாமா?
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து செல்கிறது. தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன. அதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். ஒருவர் தவறு செய்தால் அவர் எந்த துறையாக இருந்தாலும் தவறுதான். கடந்த கால மத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் மீது எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ஒரு ஊழல் குற்றச்சாட்டும் ஒருவர் மீதும் கூற முடியாத அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அங்கங்கு சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அரசு மீது குறைகூறுவதா? தமிழகத்தில் வேங்கைவயலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்குநேரியில் ஒரு பிரச்சினை நடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முத்திரை குத்த முடியாது. உச்சநீதிமன்றம் ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.
» “தமிழகத்தில் அண்ணாமலைதான் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி” - சி.வி.சண்முகம் சாடல்
» “இடைத்தரகர்கள் மூலம் என்னையும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மிரட்டின” - சபாநாயகர் அப்பாவு
புதுச்சேரியில் முதல்வரும், நானும் இணக்கமாக செயலாற்றி வருகின்றோம். உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லாததால் புறக்கணிப்பு என்றார்கள். எனக்கு புறக்கணிக்கும் பழக்கம் இல்லை, அரவணைக்கும் பழக்கம்தான் உள்ளது. மருத்துவக் கல்வி விவகாரத்தில் ஆளுநர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர்கட்சித்தலைவர் சிவா கூறுகிறார்.
நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன்? எந்த விவகாரத்துக்கும் ஆளுநர்தான் காரணமா? வெறும் வாய்க்கு ஆளுநர்கள் தான் அவலா? எதிர்கட்சித் தலைவர் சிவா ஆளுநரையே எதற்கெடுத்தாலும் மென்று வருகிறார். அவருக்கு கொஞ்சம் அவல் வாங்கி கொடுங்கள். அதை மெல்லட்டும்” என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.
முன்னதாக, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago