தருமபுரியில் முதல்முறையாக ரேஷன் கடையில் இணையவழி பணப் பரிவர்த்தனை தொடக்கம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அதகப்பாடி பகுதியில் செயல்படும் பகுதிநேர ரேஷன் கடையில் இணையவழி சேவை மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 4.68 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. 498 முழுநேர ரேஷன் கடைகளும், 586 பகுதிநேர ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதுதவிர தேவைக்கும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் ஏற்ப ஆங் காங்கே புதிய பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன.

அதன்படி, அதகப்பாடி அடுத்த செந்தில் நகர் பகுதியில் அண்மையில் புதியதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. அதகப்பாடி, சின்ன தடங்கம், செந்தில் நகர் பகுதிகளைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதகப்பாடியில் முழுநேர ரேஷன் கடை இயங்கி வந்த நிலையில் செந்தில்நகர் பகுதி மக்கள் நீண்டதூர அலைச்சலை தவிர்க்கும் வகையில் பகுதிநேர ரேஷன் கடை ஏற்படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பலனாக 215 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் செந்தில் நகர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை அண்மையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

இந்தக் கடையில், தருமபுரி மாவட்டத்திலேயே முதல்முறையாக க்யூஆர் கோடு மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு இணைய பணப் பரிவர்த்தனை (பேடிஎம் மற்றும் கூகுள் பே) மேற்கொள்ளும் சேவை தொடங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பெரும்பாலான வர்த்தக மையங்களில் இணைய பணப் பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ரேஷன் கடையிலும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை செந்தில் நகர் பகுதி ரேஷன் அட்டைதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இந்த சேவையை மாவட்டத்தில் உள்ள 1,084 ரேஷன் கடைகளுக்கும் விரிவுபடுத்த, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராமதாஸ், துணைப் பதிவாளர் ராஜா, பொது விநியோகத் திட்ட கண்காணிப்பாளர் சவிதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE