அலட்சியம் காட்டும் அரசு; பிடிவாதம் பிடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்: அவதியில் பொதுமக்கள்

By மு.அப்துல் முத்தலீஃப்

போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காமல் அரசு அலட்சியம் காட்டுவதாலும், ஊழியர்களின் பிடிவாதத்தாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முடிவுதான் என்ன?

ஊதிய உயர்வு, ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுடன் போராடி வருகின்றனர். தொழிலாளர் தரப்பில் போராட்டத்தை கடைசி ஆயுதமாக வைத்து பேச்சுவார்த்தை, தர்ணா, ஆர்ப்பாட்டம், வாயிற் கூட்டம், உள்ளிருப்புப் போராட்டம், பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்குவது என பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

இதனிடையே 10 சுற்றுக்கு மேல் அமைச்சருடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். 10-வது முறை காத்திருப்புப் போராட்டம் நடத்திய நிலையில் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது பத்து நாட்கள் தள்ளிவைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் அறிவித்ததைக் கூறிய தொழிற்சங்கத் தலைவர்களை வசைபாடிய தொழிலாளர்கள் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்திடம் விலை போய் விட்டீர்களா? என்று தொழிற்சங்க நிர்வாகிகளைப் பார்த்து தொழிலாளர்கள் கேட்டனர். காரணம் பிரச்சினை அந்த அளவுக்கு வீரியம் மிக்கது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் இப்போது பேச முடியாது, ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார் இப்போது பேச முடியாது என அரசுத் தரப்பு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்ட போதும் தொழிலாளர் தரப்பினர் பொறுமை காத்தனர்.

ஆனால் அதையே வசதியாக எடுத்துக்கொண்டு அதீத அலட்சியம் காட்டியது அரசுத் தரப்பு. இவை ஒருபக்கம் இருக்க வாழ்நாளெல்லாம் வேலை செய்பவர் ஓய்வுபெறும் முன்னர் தனக்கு கிடைக்கும் பி.எஃப், கிராஜுவிட்டி, சம்பந்தமாக பெரிய கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தான் ஓய்வுபெறுவார்கள்.

மகளின் திருமணம், மகனின் படிப்பு, வீடு கட்டுவது, கடனை அடைப்பது என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கனவு இருக்கும் அதில் கை வைத்தது தமிழக அரசு. ஓய்வூதியப் பலன்கள், பணப்பயன்கள் தற்போது கிடையாது பல ஆண்டுகள் ஆகும் என தொழிலாளர் பணத்தை வைத்துக்கொண்டு அவர்களிடமே பேரம் பேசியது.

அனைத்துப் பிரச்சினைகளும் ஒரு மையப்புள்ளியில் வெடித்துக் கிளம்பிய வெளிப்பாடே கடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையின் தோல்வியும் அதையொட்டி எழுந்த காலவரையற்ற வேலை நிறுத்தமும். அந்த சூழ்நிலையிலும் தொழிற்சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டே ஒன்றுமில்லாத சங்கங்களிடம் ஒப்பந்தம் போட்டது தமிழக அரசு. விளைவு வேலைநிறுத்தத்தில் முடிந்தது.

மேற்சொன்ன அனைத்தும் தொழிற்சங்கங்கள் தரப்பில் சொல்லப்பட்டவை என்றாலும் அதில் உள்ள நியாயத்தை யாரும் மறுக்க முடியாது. தற்போது போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அரசுத் தரப்பில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரத பழசான திட்டங்கள்தான் உள்ளன.

தற்காலிக ஓட்டுநர்களை வைத்து வாகனங்களை இயக்கியதால் இதுவரை 7 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசுப் பேருந்துகள் பல இடங்களில் விபத்துக்குள்ளாகி அரசு சொத்துக்கு சேதம்தான் பலனாக கிடைத்துள்ளது. இவை மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுமா? இல்லை நீதிமன்றம் இருக்கிறது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பொதுநல வழக்கில் வேடிக்கை பார்க்கும் சாட்சியாக அரசுத் தரப்பு இருந்தது.

செவிலியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம் போன்று நீதிமன்றம் எடுத்தவுடன் போராட்டத்துக்கு தடை, வராதவர்கள் மேல் நடவடிக்கை என்று முதலில் அணுகியது. பின்னர் தொழிலாளர் தரப்பில் வழக்கில் இணைந்தவுடன் வாதங்களைக் கேட்டு நீதிமன்றம் நிதானமாக அணுகியது. வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வுக்குச் சென்றது.

நீதிபதிகள் மக்கள் நிலையையும், பொங்கல் பண்டிகையையும் கருத்தில் கொண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அக்கறையுடன் பல யோசனைகளை முன் வைத்தனர். ஆனாலும் இரண்டு தரப்பும் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வராத காரணத்தால் நேற்றே முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது.

அரசும், போராடும் தொழிற்சங்கங்களும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். மக்களுக்காகத்தான் இந்த அரசும், பணியும். மக்களை புறக்கணிக்கும் வகையில் தங்கள் நலனிலேயே இரு தரப்பும் செயல்படுவது பொதுமக்கள் உயிர் பற்றிய அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.

சாதாரண நாட்களிலேயே சாலை விபத்துகள் மூலம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாளை போராட்டம் முடிவுக்கு வரலாம், 7 பேர் குடும்பத்தினர் இழப்பு முடிவுக்கு வராது. பண்டிகை காலம் நெருங்குவதால் தற்காலிகமாகப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்ற நீதிமன்றக் கருத்தை ஏற்கும் நிலையில் இரண்டு தரப்பும் இல்லை.

0.13 சதவீதம் மட்டுமே தற்போதைய பிரச்சினை. அதை பின்னர் பேசுவோம் பேருந்தை இயக்குங்கள் பண்டிகை நேரம் என்கிறது நீதிமன்றம். ஆனால் அதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளுங்கள், வேலை நிறுத்தத்தை முடிக்கிறோம் என்கின்றனர் தொழிற்சங்கங்கள். பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் ஊதிய உயர்வு கிடையாது என்கிறது அரசுத் தரப்பு.

பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்குச்செல்ல காத்திருக்கும் நேரம் இந்த பிடிவாதம் மக்களை கடும் அவதியில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் பேருந்துகளை இயக்க அரசு தற்காலிக ஓட்டுநர்கள், ஆயுதப்படை காவலர்கள், கல்வி நிறுவனங்களில் ஓட்டுநர்களை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பண்டிகை நேரத்தில் நிரந்தர ஊழியரே வாகனத்தை இயக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இது போன்ற தற்காலிக ஊழியர்களை நெடுஞ்சாலையில் ஓட்டிப் பழகாதவர்களை வைத்துப் பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்திருப்பது பொதுமக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டால் அதில் ஒரே நேரத்தில் பல பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு.

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைகளை அணுகுவது போன்றே பேருந்துகளை இயக்கும் முடிவில் அரசு கவலைப்படாமல் இருப்பதையே இது காட்டுகிறது. தற்போது நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்து வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டுகோளும் வைத்துள்ளது. இதை ஏற்பதன் மூலம் அரசும், தொழிற்சங்கங்களும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். பொங்கல் பண்டிகையும் சந்தோஷமாக உற்றாருடன் கழியும்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல அதைச் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கும் மக்களின் நலனில் பொறுப்பு உள்ளதால் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்