2024 மக்களவைத் தேர்தலில் போட்டியா? - ‘சஸ்பென்ஸ்’ என்று பதில் அளித்த ஆளுநர் தமிழிசை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: நாகாலாந்து மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் பின்னடைவுள்ள பகுதிளை பார்த்து சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அரசாங்கம் எல்லா உதவிகளையும் செய்யும்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் போடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பேரிடர் மீட்புக் குழுவினர் அழைக்கப்படுவார்கள். பாகூரில் சிலர் ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டும் என்றனர். சிலர் பணமாகவே கேட்கின்றனர். இது கொள்கை முடிவு.

நேரடியாக பணம் வழங்கப்படுவது மக்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கிறது. சிலருக்கு ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றது. இது சம்மந்தமாக ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை ஒன்றும் செய்ய முடியாது. அது வெற்றிக்கரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாநிலங்களில் புதுச்சேரியும் ஒரு மாநிலம். மற்றபடி மக்களுக்கு தேவையாக இருந்தால் மலிவு விலையில் வேறு ஏதேனும் கொடுப்பதற்கு வேறு வகையான நடவடிக்கை எடுக்கலாம்.

ஆளுநரும், முதல்வரும் உட்கார்ந்து பேசினால் பல தீர்வுகள் கிடைக்கும் என்பதனை முதலில் இருந்தே நான் சொல்லி வருகின்றேன். உச்சநீதிமன்றம் அந்த கருத்தை பதிவு செய்திருப்பது எனக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சி. நட்பு பாலமாக இருக்கும்போது மக்களுக்கான பல திட்டங்கள் அவர்களுக்கு கிடைப்பதில் உதவிக்கரமாக இருக்கும்.

தமிழகத்தில் ஆளுநர், முதல்வர் அமரந்து பேச வேண்டும் என்று நான் பலநாள் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு திமுகவினர் என்னை கடிந்துகொண்டனர். இது என்ன குடும்பமா? அமர்ந்து பேசுவதற்கு என்றெல்லாம் எக்ஸ் வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.

ஆக்கப்பூர்வமாக எது நடந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான். சும்மா சண்டையிட்டுக் கொண்டே இருப்பது, நீதிமன்றத்துக்கு செல்வது என்று இல்லாமல், இணக்கமான சூழ்நிலையில் பாலமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.

எம்எல்ஏக்கள் அவர்களுடைய தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது, அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தொகுதிக்குள் சென்று அங்கு என்ன பிரச்சனை என்பதை பார்க்க வேண்டும். அதைவிடுத்து என்னை அழைக்கவில்லை, வரவேற்கவில்லை, பெயர் போடவில்லை என்றெல்லாம் அரசியல் செய்ய வேண்டாம்.

ஆட்சியரைத் தான் அந்த எம்எல்ஏ கேள்வி கேட்டிருக்க வேண்டும். என்னை கேட்கக்கூடாது. உங்களைப் போன்று நானும் சிறப்பு விருந்தினராகத்தான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். நான் மக்களுக்கானவர், மக்கள் என்னை கண்கொள்கின்றனர். அந்த எம்எல்ஏ பாரபட்சமாக நடந்து கொண்டார்.

நான் எம்எல்ஏக்களுக்கு சகோதரியாக ஒரு கோரிக்கையை வைக்கின்றேன். எந்த வேற்றுமையும் பார்க்காதீர்கள். நான் எல்லாருக்கும் சகோதரிதான். எந்த தொகுதிக்கு அழைத்தாலும் நான் வரத் தயார். நிகழ்ச்சிகளுக்கு அழைக்காவிட்டால் கவலை படமாட்டேன். அழைத்தால் செல்வேன்.

ஆனால், புதுச்சேரியை எனது குழந்தையாக பார்த்து பணியாற்றுக் கொண்டிருக்கின்றேன். தெலுங்கனாவில் தமிழ் பள்ளிகளை மூட மாட்டார்கள். அப்படி ஏதேனும் வந்தால் நானே முதல் ஆளாக எதிர்த்து மூடக்கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைப்பேன். என்றார்.

அப்போது புதுச்சேரி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளீர்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இது தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தமிழிசை ‘அதற்கு என்ன அவசரம். வருங்காலத்தில் பார்க்கலாம். பின்னால் தெரிவிக்கப்படும் (சஸ்பென்ஸ்) என்று சிரித்தபடியே பதில் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE