61 தூண்களுடன் 2 கி.மீ நீளம்; ரூ.190 கோடியில் அமையும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப்பணி தொடக்கம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் கால்நூற்றாண்டாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.190 கோடியில் அமையும் மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது. 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைகிறது.

மதுரை மாநகரை வைகை ஆறு வட மதுரை, தென் மதுரை ஆகிய இரு நகரப்பகுதிகளாக பிரிக்கிறது. மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோவில் ரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றின் வடபுறம் ராஜாஜி மருத்துமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாட்டுத் தாவணி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன.

நகரின் தென் பகுதியிலிருந்து வடபகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மக்கள் வந்து செல்வதற்கு கோரிப்பாளையம் சந்திப்பு சாலைதான் பிரதான நகரச்சாலையாக உள்ளது. இந்த சாலை சந்திப்பில் பனங்கல் சாலை, செல்லூர் 100 அடி சாலை, தல்லாக்குளம் சாலை, ஏவி மேம்பாலம் சாலை ஆகிய முக்கிய நகரச்சாலைகள் சந்திக்கின்றன.

அதனால், ஒட்டுமொத்த நகரச்சாலைகளிலும் கோரிப்பாளையம் சந்திப்பில் வந்து செல்வதால் தினமும் காலை முதல் இரவு வரை போக்குவரத்து ஸ்தம்பிக்கும். இந்நிலையில் கோரிப்பாளையம் சந்திப்பு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190.40 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.

தற்போது இந்த மேம்பால கட்டுமானப்பணி கோரிப்பாளையம் பகுதியில் தொடங்கியிருக்கிறது. பாலத்திற்கு தேவையான தூன்கள் அமைப்பதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பாதாளசாக்கடை, குடிநீர் குழாய்களை அகற்றி பணிகளை தடையின்றி மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

சென்னையில் இருந்து வந்த தனியார் நிறுவனம் ஒன்று, கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைய உள்ள சாலையின் மேற்பகுதியில் இருந்தே எந்ததெந்த இடங்களில் குடிநீர் குழாய், பாதாளசாக்கடை குழாய் செல்லும் வழித்தடங்களை ‘ஸ்கேனிங்’ செய்து வருகிறார்கள். அதன்பிறகு அந்த குழாய்களை தற்காலிகமாக மாற்று இடங்களில் மாற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான செலவு தொகையை நெடுஞ்சாலைத்துறை மாநரகாட்சிக்கு வழங்க உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “கோரிப்பாளையம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு அருகில் இணையாக புதிதாக மற்றொரு புதிய பாலம் கட்டப்படுகிறது.

இந்த பாலம் 1.300 கி.மீ நீளத்திற்கு 12.00 மீ அகலத்துடன் ஒரு திசை வழித்தட மேம்பாலமாக சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்பட உள்ளது. மேலும், இதே பாலத்தில் கோரிப்பாளையம் சந்திப்பில் பாலத்திலிருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக 700 மீட்டர் நீளத்திற்கு இறங்கு தளம் 8.50 மீட்டர் அகலத்துடன் அமைய உள்ளது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணுகுசாலை (பிரதான பாலத்தின் தமுக்கம் முதல் அமெரிக்கன் கல்லூரி பகுதியில் 10.5 மீ அகலமும், நார்த் கேட் ஹோட்டல் பகுதியில் 7.50 மீ அகலமும் ) அமைக்கப்படுவதுடன் பாதசாரிகள் நடந்து செல்ல நடை மேடையுடன்(1.50 மீ அகலம்) கூடிய மழை நீர் வடிகால் வாய்க்கால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியன அமைக்க பட உள்ளது. பீபீ குளம்-காந்தி அருங்காட்சியகம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்லவதற்காக ஒரு வாகன சுரங்கப்பாதை (Vehicle Under Pass) அமைக்கபடவுள்ளது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்பொழுது இச்சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக இருக்கும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE