புதுச்சேரி: புதுச்சேரி நகர்ப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்து, இயங்கி வருகின்றன. அதே நேரத்தில் இங்குள்ள சாலைகள் மற்றும் வீதிகளை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.
ஈ.சி.ஆர் சாலை கருவடிக்குப்பம் சிவாஜி கணேசன் சிலை தொடங்கி தேங்காய் திட்டு மரப்பாலம் வரை ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் என 6 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. மேலும் அண்ணா சிலை, காமராஜர் சிலை, லெனின் வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை உட்பட பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு இடங்களில் பல லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட, புதிய போக்குவரத்து சிக்னல்கள் சரியான முறையில் இயங்குவதில்லை. பல இடங்களில் பழுதாகி காட்சிப் பொருளாக உள்ளன.
இது தொடர்பாக பாரதிதாசன் பேரன் செல்வம் கூறுகையில், "பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டிய இந்த சிக்னல்கள் பல நேரங்களில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் நிற்பதை ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. பரபரப்பான நேரங்களில் அவர்கள் வரும் போது மட்டும் சிக்னல்கள் இயக்கப்பட்டு, வழி தரப்படுவதால் மக்கள் மேலும் இன்னலை சந்திக்கின்றனர்.
ராஜீவ் காந்தி சதுக்கத்தை ஒட்டியுள்ள நட்சத்திர தகுதி வாய்ந்த தனியார் தங்கும் விடுதிக்காக விதிமுறைகளை மீறி ஏற்படுத்தி உள்ள தடைகளால் புதுச்சேரி காவல் துறை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். போக்குவரத்து சிக்னல்கள் சரியாக இயங்கப்படுவதில்லை என்று கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி, புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் மனுக்கள் தரப்பட்டுள்ளன. எந்த நடவடிக்கையும் இல்லை. இதைக் கண்டித்து அறப்போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்றார்.
ராஜீவ்காந்தி சிக்னல் சரிவர இயங்குவதில்லை. இவ்வழியேதான் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்சியர் செல்கிறார். முதல்வர் ரங்கசாமி, தலைமைச்செயலர் தொடங்கி உயர் அதிகாரிகள் பலரும் இச்சிக்னல்களை தாண்டிச் செல்கின்றனர். அவர்கள் செல்லும்போது போக்குவரத்தை போலீஸார் சீரமைக்கின்றனர். மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இது பற்றி மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலர் சரவணன் ஆளுநர், முதல்வர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை பலருக்கும் மனுக்கள் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “புதுச்சேரியின் முக்கிய சிக்னல் ராஜீவ்காந்தி சிக்னல். இந்த சிக்னல் லைட்டுகளை சரியாக எரியவிடாமல் செய்து, அதைப் பயன்படுத்தி தெரியாமல் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்க தயாராக இருக்கின்றனர். குறிப்பாக அக்கார்டு ஹோட்டல் ஓரம் போக்குவரத்து போலீஸார் நின்று கொண்டு அங்கேயே வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
சிக்னல்களை இயக்குவதை கடைபிடிக்காமல் அபராதம் விதிப்பதையே முழு பணியாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வழிகாட்டும் பலகையின் அம்புக் குறிகளும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முதலில் சிக்னல்களில் சரியான பல்புகளை பொருத்த வேண்டும். இதை சரி செய்யாவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம்" என்றார்.
இந்திராகாந்தி சிக்னலிலும் அனைத்து விளக்குகளும் சரியாக எரியவில்லை. குறிப்பாக மஞ்கள் விளக்கே எரியவில்லை. சிக்னலில் உள்ள பல விளக்குகள் சரியாக எரியாத சூழல் காரணமாக பலரும் குழப்பம் அடைகின்றனர். அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "டெண்டர் விட்டு இதை சரி செய்வோம். மூன்று மாதங்களில் சரியாகிவிடும்" என்கின்றனர். இதே பதிலைதான் பல மாதங்களாக கூறி வருகின்றனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago