“ரேஷன் கடைகளை மூடிவிட்டு எதில் சாதிக்கப் போகிறீர்கள்?'' - தமிழிசையிடம் புதுச்சேரி பெண்கள் சரமாரி கேள்வி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “ரேஷன் கடைகளை மூடிவிட்டு எந்தத் திட்டத்தை வழங்கி சாதிக்கப் போகிறீர்கள்?” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை பெண்கள் எழுப்பினர்.

'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு புதுச்சேரி மாநிலம் பகுதியாக பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''புதுச்சேரி முதல்வர் என்ன திட்டங்களை உங்களுக்கு (மக்களுக்கு) கொடுக்க நினைக்கின்றாரோ அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கின்றேன். குறிப்பாக, மகளிருக்கான ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை திட்டம், பிறந்த பெண் குழந்தைகளுக்கான ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் என அனைத்துக்கும் ஒப்புதல் அளிக்கின்றேன்.

பிரதமர் பல திட்டங்களை கிராம மக்களுக்காக கொடுத்துக் கொண்டிக்கிறார். மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் எளிய மக்கள் கூட ரூ.5 லட்சம் வரை சிகிச்சை இலவசமாக பெறலாம். விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் போன்ற பல திட்டங்களை கொடுத்துள்ளார். முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் இன்றைக்கு ரூ.24 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோல் பல நல்ல திட்டங்கள் வருகின்றன.

டீ கடையில் வேலை செய்த ஒருவர் இன்று பிரதமராக இருக்கின்றார். அதனால்தான் சாதாரன மக்களின் பிரச்சனைகள் அவருக்கு நன்கு தெரிகிறது. மக்களோடு மக்களாக இருந்தவர் அவர். 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை பிரதமர் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தேவையானவர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களும் கொடுத்துள்ளார். திட்டங்களில் பயன்பெற்றவர்கள் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்றார்.

தொடர்ந்து திட்டப் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அங்கிருந்த பெண்கள் ஆளுநரிடம், ''இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லாமல் உள்ளது. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி மாதம் 5 கிலோ அரிசி ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். நீங்கள் எதன் மூலமாக மக்களுக்கு வழங்குவீர்கள்? மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ரேஷன் கடையை மூடிவிட்டு நீங்கள் எந்த திட்டத்தை வழங்கி சாதிக்கப் போகிறீர்கள்?'' என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு ஆளுநர் பிறகு பேசிக் கொள்ளலாம் நான் பதில் சொல்கிறேன் என்று கூறி அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இருப்பினும் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட பெண்கள் ரேஷன் கடை திறப்பு பற்றிய கேள்வியை ஆவேசத்துடன் எழுப்பியபடியே இருந்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் மேடையில் இருந்து பெண்களை கீழே இறக்கிவிட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆளுநர் அவர்களிடம், ''புதுச்சேரி மக்கள் பணத்தைதான் விரும்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது'' என்று கூறியபடியே ரேஷன் கடை குறித்து எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக, மத்திய அரசின் திட்ட பயனாளிகளை நேரில் சென்று சந்தித்து அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்த ஆளுநர் தமிழிசை, பாகூர் பழமை வாய்ந்த மூலநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE