சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.1) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் பேசியது: "நவ.27 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் டிச.3, டிச.4 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும்.நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் வீழும் என்ற காரணத்தால், புயலின் போது விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
» முடிவுக்கு வந்த ஒரு வார கால போர் நிறுத்தம் - இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 14 பேர் உயிரிழப்பு
» ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களுக்கு தடை - நீதிமன்ற நடவடிக்கையின் பின்புலம்
மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.கனமழையின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல் துறை இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்திட வேண்டும்.
இந்த மழைக்காலத்தில் மாவட்ட நிருவாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், இந்தத் துறைகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்திட விரும்புகிறேன்.கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தேங்கும் மழை நீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனடியாக அகற்ற வேண்டும்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைத்திடவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.மழைக்கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உங்களுக்கு குறிப்பான தேவைகளை உடனடியாக உங்கள் மாவட்டத்தின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுக்கு தெரிவித்திட கேட்டுக்கொள்கிறேன். அதனை அரசு உங்களுக்கு செய்து தரத் தயாராக உள்ளது” என்று முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வி. ராஜாராமன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் எஸ்.ஏ. ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) எச்.எம். ஜெயராம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago