வங்கக்கடலில் டிச.3-ல் புயல் உருவாகிறது: சென்னை, புறநகர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கண்காணிப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 3-ம் தேதி வாக்கில் புயலாகவும் வலுப்பெறும். 4-ம் தேதி அதிகாலை வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 29-ம்தேதி காலை முதல் இரவு வரைசென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில் பெய்த கனமழையால் 192 இடங்களில் மழைநீர் தேங்கியது. மேற்கு மாம்பலம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பல குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. ஏராளமான சாலைகளில் மழை நீர் வடியாததால், 29-ம் தேதி இரவு முதலே சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட மக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். பிறகு, முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

நிவாரண முகாமில் தங்கவைக்கப்படுவோருக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்து, இடையூறு இல்லாமல் மின்விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு: கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறும் அறிவுறுத்தினார். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், ஆ.ராசா எம்.பி., வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE