வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழிகாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனரா? - தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த வழிகாட்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழ்நாடு, கேரளா, குஜராத், நாகாலாந்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த இந்திய குற்றவியல் சட்டத்தில் (ஐபிசி) தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்விஎன் பட்டி அமர்வு வழக்கை விசாரிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதிவழக்கு விசாரணைக்கு வந்தபோது, “வெறுப்பு பேச்சு விவகாரம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வெறுப்பை பேச்சை கட்டுப்படுத்த மாவட்டவாரியாக வழிகாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கடந்த நவம்பர் 20-ம் தேதி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்28 மாநிலங்களில் வழிகாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்விஎன் பட்டி அமர்வு முன்பு நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜரானார். அவர் கூறும்போது, “வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த 28 மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டு அதிகாரிகளை நியமித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, குஜராத், மேற்குவங்கம், நாகாலாந்து ஆகிய அரசுகள் இதுவரை பதில் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

அப்போது மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழிகாட்டு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதில் அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதிகள் கூறியதாவது:

இந்தியா மிகப்பெரிய நாடு. வெறுப்பு பேச்சு தொடர்பாக தனித்தனியாக விசாரணை நடத்தினால் வழக்குகள் மலைபோல குவிந்துவிடும். வெறுப்பு பேச்சை தடுக்க நிர்வாகரீதியான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தெசின் பொன்னவாலா வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

மத்திய அரசு தாக்கல் செய்தமனுவின்படி 28 மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டு அதிகாரிகளை நியமித்துள்ளன. தமிழ்நாடு, கேரளா, குஜராத், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வழிகாட்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் அந்த மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்தவிசாரணை 2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE