”இண்டியா” கூட்டணி பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு எப்போது? - கனிமொழி எம்.பி. தகவல்

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: ‘இண்டியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மண்டல அளவிலான 2-ம் கட்ட விநாடி- வினா போட்டிகள் அருப்புக் கோட்டையில் நடைபெற்றன. 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் மேற்பட்டோர் ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இரு பிரிவுகளிலும் சிவகங்கை மாவட்ட அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணியினர் சென்னையில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றோருக்கு கனிமொழி எம்.பி. பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, தங்கப் பாண்டியன், சீனிவாசன், தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய மூன்றையும் தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் மீது பயன்படுத்துகிறது. திமுக-வை மிரட்டி விடலாம் என்ற எண்ணத்தில் பாஜக-வினர் செயல்படு கிறார்கள்.

5 மாநில தேர்தல் முடிவுகள் ‘இண்டியா’ கூட்டணிக்கும் நாட்டுக்கும் நம்பிக்கையை தரக்கூடிய முடிவாக அமையும். ‘இண்டியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE