மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை: தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 65 பேர் வருகை

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை / காரைக்கால்: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 65 பேர் நேற்று வந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார் கோவில், கொள்ளிடம், சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் நவ.28-ம் தேதி இரவில் இருந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

நேற்றும் இதே நிலை நீடித்ததால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா நெற்பயிர்கள் மழைநீர் சூழ்ந்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு உள்ளிட்ட 28 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 3 நாட்களாக தொழிலுக்குச் செல்லவில்லை. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில் சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் இருந்த மரத்தின் கிளை முறிந்து, சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்ததில், காரின் கண்ணாடி உடைந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 65 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வந்தனர்.

அவர்கள் சீர்காழியில் உள்ளதனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூழ்நிலையைப் பொறுத்து, அவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): கொள்ளிடம் 84.20, சீர்காழி 68.40, தரங்கம்பாடி 60.40, மயிலாடுதுறை 57, மணல்மேடு 52, செம்பனார்கோவில் 30.40.

இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை பூவம், வரிச்சிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்த நிலையில், இரவு முதல் நேற்று மாலை வரை காரைக்கால், திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால், சாலைகள், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது.

காரைக்கால் அருகேயுள்ள நடுக்கலம்பேட் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகஅளவில் மழைநீர் தேங்கி,போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அவர்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த சுரங்கப் பாதையின் அருகே அரசு தொடக்கப் பள்ளி இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் 79 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE