“இந்த மழைக்கே இந்த நிலை என்றால்...” - சென்னை மழைநீர் தேக்கம் குறித்து ஓபிஎஸ் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "இந்த மழைக்கே இந்த நிலை என்றால், ‘மிக்ஜாம்’ புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. இதிலிருந்து, திமுக அரசால் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது" என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்ற நிலையில், சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை அகற்ற அரசு சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், கள யதார்த்தம் என்பது வேறாக இருக்கிறது. சாலைகளில் நீர் தேங்காவண்ணம், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சென்ற ஆண்டே தமிழக அரசு அறிவித்தது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டும், சாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருக்கிறது. திமுக அரசின் நடவடிக்கை ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல் அமைந்துள்ளது.

இன்று காலையிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்யாத நிலையிலும், சென்னைக்குட்பட்ட தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர் போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளதாகவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும், குடிநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதாகவும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மேற்கு மாம்பலத்தில் உள்ள தம்பையா ரோடு, பாபு ராஜேந்திர பிரசாத் முதல் தெரு, ராமகிருஷ்ணாபுரம், பரோடா தெரு, பிருந்தாவன் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் இன்னமும் தண்ணீர் வடியாத சூழ்நிலை உள்ளது. இது மட்டுமல்லாமல், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் நீரில் மிதக்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெருத்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். நேற்றைய மழைக்கு இரு சக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் நிலைக்கு வாகன ஓட்டிகள் ஆளாக்கப்பட்டார்கள். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், ‘மிக்ஜாம்’ புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. இதிலிருந்து, திமுக அரசால் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் வடியாமல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது சென்னைக்கு குடிநீர் அளிக்கும் ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அவற்றிலிருந்து நீர் திறக்கப்படுவதும், வருங்காலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.

உண்மை நிலவரத்தை கண்டறிந்து, யதார்த்த நிலையை கேட்டறிந்து, எந்தெந்த சாலைகளில் எல்லாம் மழைநீர் தேங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் நீரினை அகற்றவும், மீண்டும் மின்சார இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்