விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தச் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் தனியார் பேருந்துகளை கண்டு அஞ்சும் நிலை ஏற்படுகிறது என்று நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 30-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவைகளில், அரசு பேருந்துகள் சீரான வேக கட்டுப்பாட்டில் முறையாக இயக்கப்படுகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் அதிவேகத்தில், விடாமல் ஹாரன் அடித்தபடி ( ஏர் ஹாரன் தடை செய்யப்பட்டு இருந்தாலும் ) செல்கின்றன.
புதுச்சேரி - விழுப்புரம் சாலையின் புறநகர் பகுதியில் மட்டுமில்லாமல், விழுப்புரம் நகர எல்லைக்குள் வந்த பிறகும், இந்த பேருந்துகள் இதே வேகத்தில் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்துகளை கண்டாலே அஞ்சி ஒதுங்கும் அளவுக்கு இந்தப் பேருந்துகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் தற்போது வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு முன் விழுப்புரம் ஆட்சியரிடமும், ‘பொதுமக்கள் வாட்ஸ்அப்’ குழு மூலம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும், எந்த மாற்றமும் இல்லாமல் தனியார் பேருந்துகள் அதே வேகத்தில இயக்கப்படுகின்றன.
» குப்பை கிடங்காக மாறி வரும் கோவை - கொடிசியா சுற்றுப்புற பகுதி!
» மீறப்படும் போக்குவரத்து விதிகள்: கோவையில் அதிகரிக்கும் இருசக்கர வாகன விபத்துகள்
இது குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் கேட்டபோது, “விழுப்புரம்- புதுச்சேரிக்கு இடைப்பட்ட 40 கி. மீ சாலையில், தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குறிப்பிட்ட சீரான வேகத்தில் பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு ஒவ்வொரு பேருந்தும் 10 சிங்கிள் ஓட்ட வேண்டும் என்று நிர்வாக தரப்பில் இருந்து எங்களுக்கு நெருக்கடி இருக்கிறது.
நாங்களும் உயிரை பணயம் வைத்தே ஓட்டுகிறோம். இதனால் அரசு பேருந்துகளை விட கூடுதலாக 32 லிட்டர் டீசல் செலவாகிறது. ஆனாலும், கலெக்க்ஷனில் ஈடுகட்டுகிறோம். அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு உள்ள பணி பாதுகாப்பு எங்களுக்கு இல்லை. எங்கள் முதலாளிக்கு கட்டுப்பட்டு இப்படி அதிவேகத்தில் ஓட்ட வேண்டியுள்ளது. இதைத்தாண்டி அதீத பணி நெருக்கடி இருக்கிறது.
பணியாளர் பற்றாக்குறையால், ஒரு நாளைக்கு நாங்கள் 5 மணி நேரம் தூங்கினாலே அதிகம். எங்களுக்கான ஊதிய வழங்கலில் சிக்கல்கள் உள்ளன. கலெக் ஷனை கூடுதலாக காட்டினாலே எங்களுக்கான கமிஷன் தொகை கிடைக்கும். இந்தச் சிக்கல்களையெல்லாம் மாவட்ட நிர்வாகம் சீர்தூக்கிப் பார்த்து தனியார் பேருந்து நிர்வாகத்தினருடன் பேசி, முறையாக உத்தரவிட்டு இதை சரிபடுத்த வேண்டும். அனைத்தையும் சரிசெய்து, எங்கள் நிர்வாகத் தலைமை உத்தரவிடும்பட்சத்தில் நாங்களும் நிதானமாகவே ஓட்டத் தயாராக இருக்கிறோம்” என்கின்றனர்.
இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகளிடம் இதுபற்றி பேசிய போது,“அரசு பேருந்துகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அல்லது புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட உடன் ஒரு சீரான வேகத்தில் சென்று, அடுத்த நிறுத்தத்தில் நின்று புறப்பட்டுச் செல்கிறது. ஆனால் தனியார் பேருந்துகள் அப்படி செய்வதே இல்லை. புறப்பட்டவுடன் மெதுவாக நகர்ந்து, நகர்ந்து நகர எல்லையை கடக்கவே சுமார் 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அதற்குள் எவ்வளவு கூட்டத்தை ஏற்ற முடியுமோ அவ்வளவு ஏற்றுகின்றனர்.
கூட்டம் பிதுங்கி வழிந்ததும், அதுவரையில் மிக மெதுவாக சென்றதை ஈடுகட்டும் வகையில் அதிவேகத்தில் செல்கின்றனர். இந்த முறையற்ற போக்கு விபத்துக்கு வழிவகுக்கிறது. அவர்கள் ஓட்டுவதைப் பார்த்தால் வண்டிக்குள் இருக்கும் நமக்கே ஒரு பதற்ற உணர்வு ஏற்படுகிறது” என்று தெரிவிக்கின்றனர். இந்த தாறுமாறான வேகத்தால், விழுப்புரம் - புதுச்சேரி இடையே இயங்கும் தனியார் பேருந்துகளில் செல்ல வயதானவர்கள் சற்று தயக்கம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago