புவியியல், சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் - பின்னணி என்ன?

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை தொடர் சோதனை, பெரம்பலூர் கல் குவாரி ஏலம் விடுவதில் ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை தொடர்பாக, அமலாக்கத் துறையினர் அண்மையில் தமிழகம் முழுதும் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள், மணல் குவாரிகள், ஒப்பந்ததாரர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து தொடர் சோதனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே பெரம்பலூரில் கல் குவாரி ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் பாஜகவினரை தாக்கிய திமுக நிர்வாகிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தை சூறையாடினர். இது தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்த கரூர் மாவட்ட உதவி இயக்குநரான ஜெயபால், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட இணை இயக்குநர் சரவணன், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டது. தவிர, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருச்சி, கடலூர், சிவங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 49 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உதவி புவியியலாளர்களாக உள்ள 23 பேர் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. அதை அமல்படுத்தும் விதமாக தற்போது அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மற்றவர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட 49 பேரில், 23 பேர் பதவி உயர்வு பெற்றதாக கூறப்பட்டாலும் எஞ்சிய 26 பேர் எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டனர் என்ற காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அமலாக்கத் துறையின் தொடர் சோதனையின் எதிரொலியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இடமாற்றம் செய்யப்பட்ட 49 பேரில் 26 பேர் எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டனர் என தெரிவிக்கப் படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE