“முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாவிட்டால் சென்னை இந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டிருக்காது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாவிட்டால் சென்னை இந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டிருக்காது. மழை பாதிப்பு என்பது ஓரிரு இடங்களில் இருக்கத்தான் செய்யும். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எல்லா மக்கள் பிரதிநிதிகளும் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (புதன்) இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னையின் பல்வேறு இடங்களில் 10 செ.மீ. முதல் 25 செ.மீ. அளவுக்கு கனத்த மழை பெய்துள்ளது. ஆனால் சென்னையில் பெரும் பகுதியிலான இடங்களில் பாதிப்பு என்பது பெரிய அளவில் இல்லை. சென்னையில் 800 கிலோமீட்டர் தூரத்துக்கான புதிய மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்ததால் மழை பெய்தாலும் முக்கிய சாலைகளில் சில மணிநேரத்தில் வடிந்து விடுகிறது. ஏற்கனவே இருந்த கால்வாய்களை தூர்வாரிய காரணத்தால் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.

அடையாறு, கேப்டன் காட்டன், பக்கிம்காங் கால்வாய், மாம்பழம் கால்வாய் போன்றவற்றை ஆழப்படுத்தி அகலப்படுத்தி தூர்வாரியதன் விளைவாக இன்று பெரிய அளவில் மழைநீர் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு மாம்பலத்தில் பெய்த கன மழையால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் வடிந்துவிடும். தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

162 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிவாரண மையமும் பயன்பாட்டில் இல்லை என்கின்ற அளவில் மக்கள் அவரவர்களுடைய வீடுகளிலேயே தங்கி இருக்கிறார்கள். மேற்கு மாம்பலத்தில் பெய்த கன மழையால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் வடிந்துவிடும். தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாவிட்டால் சென்னை இந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டு இருக்காது. ஒரே நாளில் பெய்த 25 சென்டிமீட்டர் மழை என்பது 2015 டிசம்பரில் வந்த மழையின் அளவு. மழை பாதிப்பு என்பது ஓரிரு இடங்களில் இருக்கத்தான் செய்யும். தமிழக முதல்வர் நேற்று மாலையே மக்கள் பிரதிநிதிகளை குறிப்பாக மாநகராட்சி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் களத்தில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எல்லா மக்கள் பிரதிநிதிகளும் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE