சென்னையில் 68 இடங்களில் தேங்கிய மழை நீர் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 145 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் நீர் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அத்தியாவசியத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று (புதன்) இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், மந்தைவெளி, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள்ளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (நவ.30) காலை தேனாம்பேட்டையில் மழை நீர் தேக்கம் தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் 145 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் வடிகால்களில் தண்ணீர் உள்வாங்காததால் நீர் தேங்கியுள்ளதே தவிர வடிகால் பணிகள் தோல்வி என்று கூற முடியாது. மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டால் தேவையான அளவு வடிகால் கட்டியுள்ளோம்.

சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழை நீர் தேங்கியது தொடர்பாக வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. சென்னையில் மழை பாதிப்பு மேலும் அதிகரித்தால் மீட்புப் பணியில் களமிறங்க கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் பகுதிகளில் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியையும், மரம் விழுந்தால் உடனடியாக அகற்றும் பணியையும் கமாண்டோ படையினர் மேற்கொள்வர்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவ்வப்போது முடிவு செய்து செயல்படுத்தி வருகின்றனர்." என்றார்.

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும். இதனால், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE