ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் 358 பள்ளிகளில் காலை உணவு திட்டம்: சென்னை மாநகராட்சி அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் 358 பள்ளிகளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா, மேல் மருத்துவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோருக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் தற்போது 38 பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை 358 பள்ளிகளுக்கு முதல்வர் விரிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இவர்களுக்கு காலை உணவு செலவாக தினமும் தலா ரூ.12.71 செலவிட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, இப்பள்ளிகளில் ஆண்டு வேலை நாள் தோராயமாக 230 நாள் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, காலை உணவு திட்டத்துக்காக மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.19 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை பொறியாளர் (பொது) மேற்பார்வை பொறியாளர் (இயந்திர பொறியியல் துறை) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் 27 மைய சமையல் கூடங்களை ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை மாநகராட்சியின் வடக்கு, தெற்கு, மத்திய வட்டாரங்கள் வாரியாக மேற்கொள்ள மாமன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம நத்தம், நத்தம் புறம்போக்கு, அரசு நிலம், அனாதீன நிலம், பட்டா இல்லாத நிலம் முதலிய நிலங்களில் வசிக்கும் குடியுருப்புதாரர்களின் கட்டிடங்களுக்கு, தொடர்புடயை வட்டாட்சியர் தடையின்மை சான்று அளிக்கும் பட்சத்தில், அந்த கட்டிடங்களை மதிப்பீடு செய்து, சொத்துவரி விதிக்கவும் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் நிலம் தொடர்பாக எவ்வித உரிமையும் கோர முடியாது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் டிசம்பரில் நடத்தப்படும் பார்முலா கார் பந்தயத்துக்காக கொடிமரச் சாலை, அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சுவாமி சிவானந்தா சாலை ஆகியவற்றை ரூ.7.40 கோடியில் அகழ்ந்தெடுத்து சீரமைக்க பின்னேற்பு அனுமதி வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் ஆசிரியர்களை வெளி மாநில கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காலை உணவு திட்டத்தை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, பிற பகுதிகளிலும் தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். சென்னையில் மட்டும் நடைமுறைப்படுத்தவில்லை என்றார். புதிய சாலைகள் மழையால் சேதமடைந்தால் புகைப்படங்கள் எடுத்து, எழுத்துப் பூர்வமாக கவுன்சிலர்கள் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE