தமிழகத்தில் சிறு, நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டதால் 1.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்

By இல.ராஜகோபால்

கோவை: மின் கட்டண உயர்வு, சலுகைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் ஏராளமான சிறு, நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 1.50 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது ஜவுளித்துறை. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இவற்றில் 1,000 நூற்பாலைகள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவை. 300 நூற்பாலைகள் சிறிய பிரிவைச் சேர்ந்தவையாகும். இதுதவிர, 600 ஓபன் எண்ட் (கழிவுப்பஞ்சு) நூற்பாலைகள் உள்ளன.

ஜவுளித் தொழிலில் தொடரும் நெருக்கடி காரணமாக ஏராளமான நூற்பாலைகள் மூடப்பட்டு வருவதாகவும், லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜவுளித் தொழிலுக்கு புத்துயிரூட்ட தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் நூற்பாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகள் சங்கத் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழிலில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மின் கட்டண உயர்வு, கழிவுப் பஞ்சு விலை தொடர்ந்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஓஇ நூற்பாலைகள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இவற்றில் பணியாற்றிய 50 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

ஏற்கெனவே தொழில் அமைப்பினர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே, தமிழகத்தில் ஜவுளித் தொழில் புத்துயிர் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் சங்கத்தின் (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் கூறும்போது, "தமிழகத்தில் உள்ள 300 சிறு நூற்பாலைகளில் 50 சதவீதம் மூடப்பட்டுவிட்டன. 1,000 நடுத்தர பிரிவைச் சேர்ந்த நூற்பாலைகளில் 20 சதவீதம் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பணியாற்றிய 3 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களில் ஒரு லட்சம் பேர் ஏற்கெனவே வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். எம்எஸ்எம்இ பிரிவினருக்கு நிலைகட்டண உயர்வைக் குறைக்கவும், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முதலீடு சார்ந்த மானியம், சலுகைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே குஜராத் போன்ற மாநிலங்கள் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்க 30 சதவீத முதலீட்டு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளன. தமிழக அரசும் பல்வேறு சலுகைகளை கொண்ட புதிய ஜவுளிக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் தற்போதுள்ள நெருக்கடிகாரணமாக மேலும் பல நூற்பாலைகள், வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE