புவனகிரி அருகே 250 ஏக்கரில் தேங்கி நிற்கும் மழை நீர் - விவசாயிகள் கவலை

By செய்திப்பிரிவு

கடலூர்: புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 250 ஏக்கர் விளை நிலத்தில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ‘இன்னும் இரு நாட்களில் வடிந்து விடும்’ என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், புவனகிரிஅருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம் பகுதியில், இரண்டு நாட்க ளுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில், சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள முரட்டு வாய்க்காலில் மழை நீர் அதிக அளவில் செல்வதால் வயல் தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ளது. இதனால் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

“முரட்டு வாய்க்கால் வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மழை காலத்துக்கு முன்னரே நீர்வளத்துறை அதிகாரிகள் இதனை அகற்றி இருக்க வேண்டும். கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் இது போல மூழ்கினால் என்ன செய்வது?” என்று இப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

“அரசின் திட்டமிடாத நடவடிக்கை யால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது பற்றி இப்பகுதி நீர் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மழை காலத்தை கணக் கிட்டு, புவனகிரி பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன.

மேலும் வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டன. விவசாயிகள் குறிப்பிடும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியிலும் இந்த ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் அகற்றப்பட்ட வேகத்திலேயே மீண்டும் வளர்ந்து மழை காலத்தில் நெருக்கடியை கொடுத்துள்ளது. அதில் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியும் ஒன்று.

தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்களில் அதிக அளவில் மழை நீர் செல்வதால் வயல்களில் இருக்கும் தண்ணீர் வடிவதற்கு காலதாமதமாகிறது. இடையே வெயில் அடித்து வருகிறது. இன்றும் 2 நாட்களில் முழுவதும் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE