பிரபாகரன் மகள் துவாரகா பேசும் காணொலியின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான காணொலியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி இலங்கை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

ஏனெனில், உள்நாட்டு போரில் பிரபாகரன் 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இப்போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில் பிராபரகரன் மகள் துவாரகா பெயரில் காணொலி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக மற்றொரு நபர்களை அப்படியே பிரதி எடுக்கும் விதமான பல்வேறு காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இதுவும் அத்தகைய ஏஐ காணொலி அல்லது உண்மையானதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இணையவழி தாக்குதல் (சைபர்) தடுப்பு நிபுணர் ராஜேந்திரன் கூறும்போது, “தற்போதைய செயற்கை நுண்ணறிவின் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தில் நாம் விரும்பும் காணொலிகளை துல்லியமாக உருவாக்க முடியும். அவை போலியானவை என்பது கண்டறிவது சற்று கடினமான பணியாகும். நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட், கஜோல் உள்ளிட்டோரின் போலியான ஏஐ காணொலிகளும் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகின. அதன்படி தற்போது வெளியான துவாரகா காணொலி விவகாரத்திலும் அவற்றை துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு ஆராய வேண்டும். அப்போது மட்டுமே உண்மைநிலை தெரியவரும்” என்றார்.

ஒருபுறம் இந்த காணொலியை உண்மை எனக்கூறி விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் என்று தமிழீழ ஆதராவளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். எனினும், விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவினரும், சில தமிழர் அமைப்புகளும் இதை ஏற்க மறுக்கின்றனர். அதேபால், இந்த காணொலியின் உண்மைத்தன்மையை சர்வதேச மற்றும் இந்திய உளவு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய காணொலிகளின் உண்மைத்தன்மையை வெளிக்கொணர கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE