திருச்சி புத்தகத் திருவிழாவில் ஒழுகும் அரங்குகள்: பதறும் பதிப்பாளர்கள்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி புத்தகத் திருவிழா அரங்குகளில் மேற்கூரை சரியாக அமைக்கப்படாததால், மழைநீர் ஒழுகி, புத்தகங்கள் நனைந்து வீணாகி வருவதால், மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பதிப்பக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் புனிதவளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நவ.23-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. டிச.4-ம் தேதி வரை12 நாட்கள் நடக்கும் இப்புத்தகத் திருவிழாவுக்காக 5 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் சுமார் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 160-க்கும் மேற்பட்ட அரங்குகளில் (ஸ்டால்கள்) 100-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்துள்ளன.

மேலும், திருச்சி மாநகராட்சி, பள்ளிக்கல்வித் துறை, வேளாண்மைத் துறை என பல்வேறு அரசுத் துறைகளும் அரங்கில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, சிறார் அரங்கம், சிந்தனை அரங்கம், கோளரங்கம், செல்ஃபிபாயின்ட், விண்வெளி அரங்கம் போன்றவையும் தனித்தனியாக இடம் பெற்றுள்ளன. சுமார் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்து இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கண்காட்சி அரங்கின் மேற்கூரையை சரியாக அமைக்காததால், தற்போது பெய்து வரும் மழையால், பல அரங்குகளில் மழைநீர் ஒழுகி படைப்பாளர்களின் படைப்புகள் நனைந்துவிடுகின்றன. இதனால், தார்ப்பாய் கொண்டு தங்கள் படைப்புகளை அரங்க பணியாளர்கள் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்ட அரங்கில் மழை நீர் ஒழுகியதால் நனைந்த கற்றல்
கற்பித்தல் உபகரணங்களை எடுத்து, வேறு இடத்துக்கு மாற்றும்
பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.

நேற்று முன்தினம் பெய்த மழையால், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் காட்சிக்கு வைத்திருந்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் நனைந்து வீணாகின. அவற்றை தன்னார்வலர்கள் பாதுகாப்பதற்குள் படாதபாடு பட்டனர். அதேபோல, பல்வேறு புத்தக அரங்குகளில் மழைநீர் ஒழுகுவதால், தார்ப்பாய் கொண்டு படைப்புகளை பாதுகாத்து வருகின்றனர். எனவே, மழைநீர் ஒழுகாதவாறு மேற்கூரைகளை சீரமைத்துத் தரும்படி அரங்கில் உள்ள பதிப்பக பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE