நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் உலா வரும் தெரு நாய்கள்: பதற்றத்தில் பயணிகள்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை குறித்து ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதியில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவில் இங்கு ரயில்களை பிடிக்க வந்த பயணிகள் சிலரை நாய்கள் குரைத்து அச்சுறுத்தின. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் பெரும் அச்சத்துடன் செல்வதை பார்க்க முடிந்தது. இங்குள்ள நடை மேடைகளிலும், ரயில் நிலைய நுழைவு வாயிலிலும் சர்வசாதாரணமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. பயணிகள் சாப்பிடும் தின்பண்டங்கள், உணவுகளில் மீதமானவற்றை உண்பதற்காக நாய்கள் ஒன்றுக்கொன்று குரைத்து சண்டையிடுவதும் வாடிக்கையாக நடைபெறுகிறது. மேலும் நடைமேடைகளிலும், ரயில் நிலையத்தினுள் பல்வேறு இடங்களையும் தெரு நாய்கள் கழிப்பிடமாக மாற்றுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

ரயில் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் நிம்மதியான பயணத்துக்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் மட்டுமின்றி பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE