நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பதால் வேகமாக நிரம்பும் அணைகள்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நீடிக்கும் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மணி முத்தாறு, குண்டாறு அணையில் - தலா 1 மி.மீ., கருப்பா நதி அணையில்- 3.5 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 107.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 857 கன அடி தண்ணீர் வந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 119.62 அடியாகவும், 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 74.85 அடியாகவும் இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 376 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 77.30 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வரும் 60 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

இதுபோல் 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராம நதி அணை நீர்மட்டம் 77 அடியாகவும், 72 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும் உள்ளது. கருப்பா நதி அணைக்கு வரும் 40 கன அடி தண்ணீர், ராம நதி அணைக்கு வரும் 50 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. 36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை ஏற்கெனவே நிரம்பியிருப்பதால் அணைக்கு வரும் 38 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE