அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.1-ம் தேதி புயலாக வலுப்பெறும் - தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிச.1-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிச.3-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு, வடமேற்காக நகர்ந்து நாளை (29-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (நவ.28, 29) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.3-ம் தேதி வரை மழை நீடிக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

நேற்று (நவ.27) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 10 செ.மீ. சென்னை அண்ணா நகர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. சென்னை மீனம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, சென்னை அடையாறு, சோழிங்கநல்லூர், அண்ணா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் (நவ.28, 29) தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், நவ.30-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளிலும் அதிகபட்சம் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

டிச.1-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE