திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி, மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதியும், பாதுகாப்பும் அளிக்கக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அவர் மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவர் ஜெயலலிதாதான். அதனால்தான் சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை தி.க தலைவர் கி.வீரமணி, ஜெயலலிதாவுக்கு வழங்கி பாராட்டினார்.

பொது தொகுதியில் ஆதிதிராவிட சமூகத்தினரை நிற்க வைத்தவர் ஜெயலலிதாதான். சமூக நீதியை நிலை நாட்டியவரும் அவர்தான். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசி வருகிறார். செயலில் காட்டமாட்டார். திமுகவில் கனிமொழிக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அவர்களது குடும்பத்திலும் பெண்களுக்கு சமூக நீதி, சமத்துவம் இல்லை. சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என தமிழக மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களைஏமாற்றும் செயலில்தான் திமுக அரசு ஈடுபட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும். திமுகதான் அமலாக்கத்துறை, சிபிஐயை பார்த்து பயப்பட வேண்டும். நாங்கள் பயப்படவேண்டிய தேவை இல்லை. தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE